மாயா பஜார்

உலகின் மிக உயரமான சைக்கிள்!

திலகா

பிரான்ஸைச் சேர்ந்த இரண்டு இரு சக்கர வண்டிகளின் ஆர்வலர்கள் உலகின் மிக உயரமான, ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள்!

நிக்கோலஸ் பாரியோஸும் டேவிட் பெய்ரூவும் நண்பர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, உயரமான சைக்கிளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. உடனே அதைச் செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் இரண்டு பேருக்கும் வந்துவிட்டது. உயரமான சைக்கிளுக்கான வரைபடத்தைத் தயாரிக்கவே பல மாதங்கள் பிடித்தன. அலாய், இரும்பு, மரம் ஆகியவற்றிலிருந்து சைக்கிள் பாகங்களை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். இப்படி உருவாக்கும் சைக்கிள் குறைந்த தொலைவுக்காவது ஓட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.

பொருள்களை வாங்கி, ஒவ்வொன்றையும் திட்டமிட்டபடி செதுக்கி, பாகங்களை உருவாக்கி, இணைப்பதற்குப் பல நூறு மணி நேரங்கள் பிடித்தன. பெடலும் சக்கரங்களும் 16 மீட்டர் சங்கிலியுடன் இணைக்கப்பட்டன. இறுதியில் 25 அடி உயரமுள்ள சைக்கிளை உருவாக்கிவிட்டனர். இது சாதாரணமான விஷயம் அல்ல.

சைக்கிளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள மரம் ஏற்கெனவே கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வந்த மரம். அதேபோல இரும்பும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வந்த இரும்பு. அதனால் இந்த ராட்சச சைக்கிளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

ஓடக்கூடிய வகையில் சைக்கிளை உருவாக்க, 2 ஆண்டுகளாகின. நிக்கோலஸும் டேவிட்டும் க்ளமெண்ட் ஃபெரான் நகரில் நடைபெறும் சைக்கிள் திருவிழாவில், இந்த உயரமான சைக்கிளை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தனர். டேவிட் சைக்கிளை ஓட்டிக் காட்ட விரும்பினார். நிக்கோலஸும் ஒப்புக்கொண்டார்.

சைக்கிள் திருவிழாவுக்கு சைக்கிளைக் கொண்டு செல்வதே பெரும்பாடாக இருந்தது. கிரேன் மூலம் டேவிட் சைக்கிள் இருக்கையில் அமர்ந்தார். பாதுகாப்புக்காக அவர் இடுப்பில் கயிறு கட்டப்பட்டது. தலைக்குக் கவசம் அணிவிக்கப்பட்டது.

சமநிலையைப் பராமரிக்கத் தேவையான வேகத்தைப் பெறுவது மிகவும் சவாலாக இருந்தது. உயரமான சைக்கிளைக் கீழே விழுந்துவிடாமல் பிடிக்க, டேவிட் கைகள் சிரமப்பட்ட காட்சி வீடியோவில் தெரிந்தது. ஆரம்பத்தில் சைக்கிளை ஓட்டுவதில் அவர் தடுமாறினாலும் பிறகு சமாளித்து, நூறு மீட்டருக்கு அதிகமான தூரம் ஓட்டிச் சென்றுவிட்டார் டேவிட். இதன் மூலம் ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்து, 36 செ.மீ. தூரம் அதிகம் பயணித்ததால் கின்னஸில் இடம்பிடித்துவிட்டார் டேவிட்!

SCROLL FOR NEXT