பொதுவாகக் குழந்தை வளர்ப்பின்போது நாம் எல்லாரும் என்ன நினைக்கிறோம்?
குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, குழந்தைகளுக்குப் பெரியவர்கள்தான் எல்லாவற்றையுமே கற்றுத்தர வேண்டும். பெரியவர்கள் சொல்லும் அனைத்தையும் குழந்தைகள் கேட்டு நடக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எதையும் பிரித்தறிய முயலாமல், வித்தியாசமாக எதையும் முயன்று பார்க்காமல் காலம்காலமாகப் பலரும் செய்துவந்தவற்றையே கேள்வி கேட்பாரில் லாமல் செய்துகொண்டி ருப்பார்கள்.
ஒவ்வொரு மனிதரும் சிந்திக்கத் தெரிந்தவர்தான். அப்படி இருக்கும் போது காரண, காரியத்தைத் தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் எப்படி ஏற்று நடக்க முடியும்?
காரண, காரியம் சரியாக இருந்தால் சரிஎனச் சொல்லலாம். அப்படி இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்று நடக்கக் கூடாது, ‘நோ' சொல்ல வேண்டும் என்கிறது இந்தப் புத்தகம். இப்படி நிறைய கேள்வி கேட்கவும், சரியான பதில் வராதபோது ‘நோ' சொல்லவும் பல்வேறு செயல்பாடுகள், ஆளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்கள், ஏன் ‘நோ' சொல்ல வேண்டும் என்பதற்கான எளிய உதாரணங்களையும் விவரிக்கிறது இந்த நூல்.
குழந்தைகள் ‘நோ' சொல்வதைப் பெரிய வர்கள், பெற்றோர் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவையெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. அவற்றை நடைமுறையில் அனுப விக்க நிறைய கேள்விகள் கேட்கவும், தேவைப்படும் இடங்களில் ‘நோ' சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சிந்திக்கத் தெரிந்த மனிதராக நாம் வாழ முடியாது.
‘நோ' சொல்லுங்க, சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி, மேஜிக் லேம்ப் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302