ஊரெல்லாம் மரங்களில் மஞ்சள் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! பரிணாம வளர்ச்சியில் தாவரங்கள் எப்போது பூக்க ஆரம்பித்தன டிங்கு? - ஆர். அனிருத், 5-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.
இந்த வெயிலிலும் மஞ்சள் மலர்களைப் பார்க்கும்போது உற்சாகமாகத்தான் இருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் 47.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் தாவரங்கள் தோன்றின. ஆனால், 13 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன. நீர்நில வாழ்விகள், விலங்குகள், பறவைகள் எல்லாம் உருவான பிறகுதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன, அனிருத்.
ஐஸ்கட்டி மழை எப்படி உருவாகிறது, டிங்கு? - ர. தக்ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
சூடான காற்று மேலே செல்லும்போது மேகங்களுக்கு அடியில் இருக்கும் நீர்த்துளிகள் மேல் நோக்கிச் செல்கின்றன. அங்கே உறைய வைக்கும் குளிர் நிலவும்போது, நீர்த்துளிகள் பனிக்கட்டிகளாக மாறுகின்றன. பனிக்கட்டிகளின் அடர்த்தி அதிகமாகும்போது கீழ் நோக்கி வருகின்றன.
அப்போது சூடான காற்று பனிக்கட்டிகளை உருக வைக்கிறது. உருகிய நீர் மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மிகக் குளிர்ந்த பரப்பை அடையும்போது மீண்டும் பனிக்கட்டிகளாக மாறி, நிலத்தில் விழுகின்றன. இதைத்தான் நாம் ஆலங்கட்டி மழை என்கிறோம். பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இல்லாவிட்டால், நீர்த்துளிகளாகவே விழுந்துவிடும், தக்ஷணா.