மாயா பஜார்

விடுமுறையில் வாசிக்கலாமே!

ஆதி

புதையல் டைரி, யெஸ். பாலபாரதி

ங்கச்சிமடம் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான் ஜான்சன். அவனுடைய தாத்தா கஸ்பர் தனது பேரன், பேத்தி இருவருக்கும் 'ஒரு புதையல் பரிசைப்' பற்றி டைரியில் எழுதி வைத்துவிட்டு காலமாகிவிட்டார். அந்த டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. தன் நண்பர்கள் உதவியுடன் அந்த டைரியில் இருக்கும் புதிர்களுக்கான விடைகளையும், அவற்றின் மூலம் தாத்தா சொன்ன புதையலையும் தேடிப் பயணிக்கிறான் ஜான்சன். அந்தத் தேடலின் ஒவ்வொரு கட்டத்திலும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கு அந்தப் புதையல் கிடைத்ததா, புதையலாக இருந்தது என்ன என்பதை எல்லாம் இந்தப் புத்தகம் சுவாரசியமாகச் சொல்கிறது. புதிர்களும் விடுகதைகளும் இந்த நூலின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924

வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும்

பேசிக்கொண்டது என்ன?, ஜனகப்ரியா

ச்சைக்கிளியும் வண்ணத்துப்பூச்சியும் பேசிக்கொள்கின்றன. அப்படி அவை என்ன பேசிக்கொண்டன? மனிதர்கள் மரங்களை அழிக்கிறார்கள். அப்படி அழிப்பதால் மரங்கள் மட்டுமா அழிகின்றன? மரங்களைச் சார்ந்து வாழும் பூச்சிகள், பறவைகள், உயிரினங்கள் என எல்லாவற்றுக்குமே ஆபத்துதானே. முன்பு மரங்களை மதித்த மனிதர்கள், இன்றைக்கு எந்தக் கவலையும் இல்லாமல் மரங்களை வெட்டுகிறார்கள். இப்படிப் பூவுலகில் மரங்கள் இல்லாமல் போய்க்கொண்டே இருந்தால் என்ன ஆகும் என்று இந்த சூழலியல் கதை சொல்கிறது.

நீலவால் குருவி வெளியீடு, தொடர்புக்கு: 94428 90626

பாலன் என்னும் குட்டி வௌவால்

பா

லூட்டிகளால் பறக்க முடியுமா? பாலூட்டிகள் முட்டையிடுமா? நீரில் வாழும் பாலூட்டிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதுபோல உயிரினங்களின் உலகம் தொடர்பாக நாம் அறியாத எளிமையான விஷயங்களைக் கதை போலச் சொல்கின்றன 'வியப்பில் ஆழ்த்தும் விலங்கு ராஜ்ஜியம்' என்ற வரிசைப் புத்தகங்கள். மேற்கண்ட கதையில் வரும் பாலன் என்னும் குட்டி வௌவால், பிறந்து சிறிது காலத்திலேயே தரையில் கீழே விழுந்துவிட்டது. வழி தவறிவிட்ட அந்த உயிரினம், தனது இனத்தினரையும் வீட்டையும் எப்படிக் கண்டடைகிறது என்பதே கதை. வௌவால் இரவில் விழித்திருக்கும் பகலில் தூங்கும். நமக்குக் கேட்காத மீயொலி அலைகளையும் இந்தச் சிறிய உயிரினத்தால் கேட்க முடியும் என்பது போன்ற பல அறிவியல் தகவல்களை இந்தப் புத்தகம் கதை வழியாகச் சொல்கிறது.

நெஸ்ட்லிங் புக்ஸ் (என்.சி.பி.எச்.) வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

கடலும் கிழவனும் (சுருக்கமான வடிவம்), ச. மாடசாமி

ர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ்பெற்ற கதை கடலும் கிழவனும். கடலுக்கு மீன் பிடிக்கத் தனியாகப் போகும் ஒரு தாத்தா 84 நாட்களுக்கு மீனே கிடைக்காமல் திரும்புகிறார். ஆனாலும் தொடர்ந்து கடலுக்குச் செல்லும் அவருக்கு 85-வது நாள், அவரது படகைவிடப் பெரிய மீன் கிடைக்கிறது. தனியாகப் போராடி அந்த மீனை வீழ்த்தி, தன் படகுடன் இணைத்துக் கொண்டு வருகிறார். ஆனால், அந்த மீனைக் கரைக்கு இழுத்து வருவதற்குள்ளாகவே ரத்த வாடை பிடித்து சுறாக்கள் அடுத்தடுத்து வந்து அந்தப் பெரிய மீனை சிதைக்கின்றன. மூன்று நாட்களுக்கு எதுவும் சாப்பிடாத அந்தத் தாத்தா, மீனைச் சாப்பிட வரும் ஒவ்வொரு சுறாவுடனும் போராடுகிறார். சுறாக்களின் தாக்குதலால் அவர் பிடித்த 18 அடி நீளம் கொண்ட மீனில் சிறிதளவுகூட மிஞ்சவில்லை. ஆனாலும், கரை சேர்ந்த அந்தத் தாத்தா தளர்ந்துபோகவில்லை. அவருக்கு எப்படிப் புது நம்பிக்கை பிறக்கிறது என்று சொல்லும் உலகப் புகழ்பெற்ற கதை இது.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924

கேளு பாப்பா கேளு, உதயசங்கர்

மிழ் குழந்தைகளுக்கு நிறைய நேரடிக் கதைகளையும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு வழி படைப்புகளையும் ஏராளமாகத் தந்தவர் உதயசங்கர். குழந்தைகளுக்கான எழுத்துக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்து வரும் உதயசங்கர், சிறார் பாடல்களையும் எழுதியிருக்கிறார். எளிமையான சொற்கள், பாடுவதற்கு ஏற்ற சந்தத்தில் அமைந்த அவருடைய பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

SCROLL FOR NEXT