மாயா பஜார்

பொம்மைகளின் கதை: மரப்பாச்சி பொம்மைகள்

ஷங்கர்

ரத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள், ஆணும் பெண்ணுமாக ஜோடியாகக் கிடைக்கின்றன. உருவம் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கும். திருமணமான புதுத் தம்பதிக்குப் பெற்றோரால் கொடுக்கப்படும் பொம்மைகள் இவை. அந்தக் காலத் திருமணங்களில் ஒளிப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் இல்லை. அதனால் திருமணமான தம்பதியர் தங்களுக்கு வழங்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் வழியாகவே தங்களின் திருமணத்தை நினைவுகூர்ந்திருக்கின்றனர். ஒளிப்படங்கள், வீடியோ மூலம் தங்கள் பெற்றோரின் திருமணத்தைப் பார்க்க முடியாத குழந்தைகள், மரப்பாச்சி பொம்மைகள் வழியாகவே பார்த்தனர். திருமண உடையில்தான் மரப்பாச்சி பொம்மைகள் இருக்கும். பிறகு அந்தப் பொம்மைகள் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காகத் தரப்படும்.

25CHSUJ_DOLLS

ஆந்திர மாநிலத்தின் திருப்பதிதான் மரப்பாச்சி பொம்மைகள் பிறந்த இடம் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இந்தப் பொம்மைகளை வேங்கடாஜலபதி, பத்மாவதி என்றும் நம்புபவர்களும் மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால் மரப்பாச்சிகளை முதலில் வடிவமைத்துப் பார்த்தார் கடவுள் என்று கூறுபவர்களும் உண்டு.

தமிழகத்திலும் ஆந்திராவிலும் மரப்பாச்சிகள் பிரபலமாக இருந்துள்ளன. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மாநிலங்களுக்கும் மரப்பாச்சிகள் பயணம் செய்துள்ளன. மரப்பாச்சி பொம்மைகள் வீட்டின் வளத்துக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அடையாளமாக தென்னிந்தியக் குடும்பங்களில் பராமரிக்கப்பட்டன. ஊசியிலை, முள்ளிலவு, தேக்கு, செம்மரம், செஞ்சந்தனம் போன்றவற்றில் மரப்பாச்சிகள் செய்யப்படுகின்றன. செஞ்சந்தனத்தில் செய்யப்படும் மரப்பாச்சிகளை எடுத்து வாயில் சப்பும் குழந்தைகளுக்கு மருத்துவப் பயனை அளிக்கிறது என்றும் கருதப்பட்டது.

20-ம் நூற்றாண்டில் செலுலாய்ட், துணி, ரப்பர், பிளாஸ்டிக்கில் பொம்மைகள் குழந்தைகளிடையே புகழ்பெறத் தொடங்கின. மரப்பாச்சிகள் தற்போது இந்தியாவின் அருங்காட்சியகங்கள், தனிநபர் சேகரிப்புகளிலேயே காணப்படுகின்றன. ஆந்திராவில் உள்ள கொண்டபள்ளியில் மரப்பாச்சி, கூடுதல் அழகுடன் ராஜா, ராணி பொம்மைகளாக அவதாரம் எடுக்கின்றன.

(நிறைந்தது)
தொடர்புக்கு: sankararamasubramanian.p @thehindutamil.co.in

SCROLL FOR NEXT