மாயா பஜார்

உடல் எனும் இயந்திரம் 18: ஒலி வாங்கி

கு.கணேசன்

லிகளைக் கேட்டு உணர்வதற்கும் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கும் நமக்குக் காதுகள் பயன்படுகின்றன. விலங்குகளுக்கு இந்தப் பயன்களோடு எதிரிகளின் நடமாட்டத்தை உணர்ந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் காட்டாற்று வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை ஆபத்துகளை அறிந்துகொண்டு அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் காதுகள் பயன்படுகின்றன.

சில விலங்குகள், பறவைகள் கூவுவது, அகவுவது, அலறுவது, பிளிறுவது போன்ற பலதரப்பட்ட ஒலிகளை எழுப்பித் தமக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. வௌவால் ஒலி அலைகளை அனுப்பி, எதிரொலிகளை உணர்ந்து, பயணப் பாதையை அமைத்துக்கொள்கிறது.

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என மூன்று பகுதிகள் உண்டு. வெளியில் தெரிவது குருத்தெலும்பால் ஆன ‘செவிமடல்’ (Pinna). இது மூன்று சிறிய தசைகளால் தலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் ஒரு துளை. இதிலிருந்து 2.5 செ.மீ. நீளத்தில் ஒரு குழல் உள்ளுக்குள் செல்கிறது. இது ‘செவிக்குழல்’ (Ear canal). செவிமடலும் செவிக்குழலும் சேர்ந்ததுதான் வெளிக்காது. இது ஓர் ‘ஒலி வாங்கி’. சுற்றி இருக்கும் சத்தத்தைச் சேகரித்துக் காதுக்குள் அனுப்பிவைக்கிறது.

வெளிக்காதின் தனித்தன்மை பல விலங்குகளை அடையாளம் காண உதவுகிறது. மாடுகள் உள்ளிட்ட பல விலங்குகள் ஒலி அலைகளைச் சேகரித்து உணர்வதற்குத் தம் காதுகளை அசைத்துக்கொண்டே இருக்கின்றன. பூனை, நாய், நரி, குதிரை, முயல் போன்ற விலங்குகள் தங்களின் வெளிக்காதுகளை ஒலி வரும் திசை நோக்கித் திருப்பி, ஒலியின் தன்மையை உடனே தெரிந்துகொள்ளும் திறனுடையவை.

வெட்டுக்கிளி போன்ற சில பூச்சிகளுக்குக் காலில் காதுகள் இருக்கின்றன. மீன், தவளை, கழுகுக்கு வெளிக்காது இல்லை. ஆப்பிரிக்க யானைகளுக்கு வெளிக்காதின் அகலம் 1.2 மீட்டர்வரை இருக்கும்.

காதுக்குள் செவிக்குழல் முடியும் இடத்தில், ஒரு செ.மீ. அகலத்தில், மெல்லிய சவ்வால் இறுக்கிக் கட்டப்பட்ட மேளம் போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதுதான் ‘செவிப்பறை’ (Ear drum). காது சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை பாதுகாப்பாக இருக்க வேண்டும். செவிக்குழலில் சின்னச் சின்ன முடிகளும் ‘மெழுகு'ச் சுரப்பிகளும் (Ceremonious glands) உள்ளன. இந்தச் சுரப்பிகள் மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இது உலர்ந்து குரும்பியாக (Ear wax) மாறுகிறது. காதுக்குள் நுழையும் தூசு/பூச்சி/அந்நியப் பொருள்கள் செவிப்பறையைப் பாதிப்பதை இங்குள்ள முடிகளும் குரும்பியும் தடுக்கின்றன.

செவிப்பறைக்கு அடுத்து உட்பக்கமாக இருக்கும் குழி போன்ற சிறிய அறைதான், நடுக்காது. இங்கு செவிப்பறையை ஒட்டிக்கொண்டு சிறு எலும்பு உள்ளது. இது சுத்தி எலும்பு (Malleus). இதை ஒட்டி இன்னும் ஒரு சிறு எலும்பு உள்ளது. அது பட்டை எலும்பு (Incus). பட்டை எலும்போடு ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாவது எலும்பு, அங்கவடி (Stapes). இந்த எலும்புக்கு ஒரு சிறப்பு உண்டு. இதுதான் உடலிலேயே மிகச் சிறிய எலும்பு. 2.5 மி.மீ. நீளமுள்ளது. இதைப் பிணைத்திருக்கும் ‘ஸ்டெபிடியஸ்’ (Stapedius) தசைதான் உடலிலேயே மிகச் சிறிய தசை; ஒரு மி.மீ. நீளமுள்ளது.

நடுக்காதிலிருந்து தொண்டை வரைக்கும் ‘நடுச் செவிக்குழல்’ (Eustachian tube) எனும் குழாய் செல்கிறது. வெளிக்காதுக்கும் நடுக்காதுக்கும் இடையில் காற்றின் அழுத்தம் சரியாக இருந்தால்தான் காது நன்றாகக் கேட்கும். அதற்கு நடுச் செவிக்குழல் உதவுகிறது. காது அடைத்துக்கொள்கிறது என்று சொல்வீர்கள் அல்லவா? உண்மையில் காது அடைத்துக்கொள்வதில்லை! தொண்டை யிலிருந்து வரும் சளி போன்ற திரவத்தால் இந்தக் குழாய்தான் அடைத்துக்கொள்கிறது. அதனால் நடுக்காதில் காற்றழுத்தம் அதிகமாகி, காது அடைப்பதுபோல் தோன்றுகிறது. விமானம் தரையிலிருந்து எழும்போது நமக்குக் காது அடைப்பதும் இதனால்தான்.

நடுக்காதுக்கு அடுத்திருப்பது, உள்காது. இது கபாலத்தில் பொட்டெலும்பில் (Temporal bone) புதைந்துள்ளது. உள்காதானது வெஸ்டிபியூல் (Vestibule), அரைவட்டக் குழல்கள் (Semicircular canals), ‘காக்ளியா' (Cochlea) எனும் மூன்று சிக்கலான அமைப்புக்களைக் கொண்டது. காக்ளியா காது கேட்க உதவுகிறது. வெஸ்டிபியூல், அரைவட்டக் குழல்கள் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

இந்த மூன்றில் நடுவில் இருப்பது வெஸ்டிபியூல். இது 5 மி.மீ. நீளமுள்ள வட்டவடிவக் குழல். இங்கு யுட்ரிக்கிள் (Utricle), சாக்யுல் (Saccule) என்று இரண்டு பைகள் உள்ளன. இவற்றில் முடி போன்ற இழை அணுக்கள் (Hair cells) நிறைய உள்ளன. இவை மூளையிலிருந்து வரும் செவிநரம்புடன் (Auditory nerve) இணைந்துள்ளன. வெஸ்டிபியூலில் நீள்வட்டச் சன்னலும் (Oval window), இதற்குக் கீழே வட்டச் சன்னலும் (Round window) இருக்கின்றன. இவை நடுக்காதின் அங்கவடி எலும்புடன் இணைந்துள்ளன.

வெஸ்டிபியூலின் பின்பக்கத்தில் இருப்பவை, மூன்று அரைவட்டக் குழல்கள். இவை ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக இருக்கின்றன. இவற்றில் பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகை திரவங்கள் உள்ளன. இவை வெஸ்டிபியூலில் உள்ள யுட்ரிக்கிள், சாக்யுல் (Saccule) பைகளுக்கு வந்து சேர்கின்றன. நாம் நடக்கும்போது, ஓடும்போது, குனியும்போது இந்தத் திரவங்கள் அசைகின்றன. அந்த அசைவுகளை இங்குள்ள இழை அணுக்கள் மின்சமிக்ஞைகளாக மூளைக்கு அனுப்பிவைக்க, மூளை அவற்றைப் பரிசீலித்து உடலைச் சமநிலைப்படுத்துகிறது.

வெஸ்டிபியூலுக்கு முன்புறம் காக்ளியா இருக்கிறது.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT