நிறைய குழந்தைகள் எழுதத் தொடங்கிவிட்ட காலம் இது. எழுத்து மட்டுமல்ல, மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்கள், அதுவும் தமிழில் இருந்து ஆங்கிலத்தில். விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘வாத்து ராஜா’ எனும் சிறார் நூல் பிரபலமான ஒன்று. த
ற்போது இந்த நூலை சென்னை பட்டிங் மைண்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் அஞ்சனா, மதுமிதா, மிருதுளா, வள்ளி, வர்ஷிதா சரவணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த முயற்சி, ‘The Duck king' எனும் தலைப்பில் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ளது. படிக்கும் வயதிலேயே மொழியாக்கத்தில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது.
(தொடர்புக்கு: 044-24332924)
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ‘கலர் பலூன்’ என்கிற சிறார் இதழை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்த வண்ண இதழ், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் படைப் பாற்றலுக்கு இந்த இதழில் முழு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கதை, ஓவியம், கவிதை, கட்டுரை, நூல் அறிமுகம், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மாணவ, மாணவியர் பங்களித்துள்ளனர்.
இந்த இதழின் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதழின் பொறுப்பாசிரியர் ந.ரவிசங்கர், பதிப்பாசிரியர் கோ.காமராஜன். இதுபோல் இன்னும் பல இதழ்கள் மாவட்டம்தோறும் பூக்க வேண்டும்.
(தொடர்புக்கு: 97864 60918)