ஆடுகளின் கருவிழி இரவு நேரத்தில் வட்டமாகவும் பகல் நேரத்தில் செவ்வகமாகவும் தெரிவது ஏன், டிங்கு? - செ. தீபன், 9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, துக்கியாம்பாளையம், சேலம்.
ஆடுகள் தாவரங்களைச் சாப்பிடக்கூடியவை. காடுகளில் வாழ்ந்தபோது பெரிய விலங்குகளால் வேட்டையாடப்படும் சூழல் இருந்தது. ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆடுகளின் கண்கள் பரந்த காட்சிகளைக் காணும் விதத்தில், பரிணாம வளர்ச்சியில் பெற்றுள்ளன. ஆடுகளால் 320 டிகிரியிலிருந்து 340 டிகிரி வரைக்குமான காட்சிகளைக் காண முடியும்.
இதற்குச் செவ்வக வடிவில் இருக்கும் கண்களின் பாவைகள் (கருவிழி) உதவுகின்றன. குறைந்த ஒளி, வெளிச்சம் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் கண்களின் பாவைகள் செயல்படும். ஆனால், இரவில் வட்ட வடிவத்துக்கு மாறாது, தீபன்.
இரவில் செடி, மரங்களில் உள்ள இலைகளையும் பூக்களையும் காய்களையும் பறிக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன், டிங்கு? - தெ. சாஸ்மதி, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
இரவு நேரத்தில் வெளிச்சம் இருக்காது என்பதால் நம்மால் மரம், செடிகளில் இருக்கும் பூச்சிகளையோ பாம்புகளையோ பார்க்க இயலாது. தெரியாமல் கைகளை வைக்கும்போது அவற்றால் நமக்குத் தீங்கு நேரிடலாம் என்பதற்காக இரவு நேரத்தில் செடி, மரங்களில் இருந்து இலை, பூ, காய், கனி போன்றவற்றைப் பறிக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள், சாஸ்மதி. இரவு நேரத்தில் சில உயிரினங்கள் உணவு தேடி வரலாம், பறவைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம். அவற்றை நாம் தொந்தரவு செய்யாமல் இருக்கலாமே!