ராமேஸ்வரம் கடலில் ஏன் அலைகள் இல்லை, டிங்கு? - ச. காவியஸ்ரீ, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
காற்றினால்தான் அலைகள் உருவாகின்றன. கடற்கரையில் இருக்கும் காற்று எளிதில் சூடாகி, மேல்நோக்கிச் செல்லும். அப்போது கடற்கரையில் உருவாகும் வெற்றிடத்தை நோக்கி, கடல்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று வரும். இதனால் கடற்கரைக்கு அருகில் காற்றினால் ஏற்படும் அலைகள் தோன்றுகின்றன.
ராமேஸ்வரத்தில் தென்மேற்குப் பகுதியிலிருந்து வரும் காற்றை, தனுஷ்கோடி நிலப்பரப்பு தடுத்துவிடுகிறது. அதனால் ராமேஸ்வரத்தி லிருக்கும் கடல் பகுதியில் அலைகள் பெரிதாக உருவாவதில்லை. தனுஷ்கோடியில் அலைகள் இருக்கும், காவியஸ்ரீ.
நெடுஞ்சாலைகளில் தொலைபேசிப் படத்துடன் கூடிய பெட்டிகளை ஆங்காங்கு பார்த்தேன். அது எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது, டிங்கு? - ஜி. இனியா, 7-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நெடுஞ்சாலைத் துறை தொலைபேசிப் படத்துடன் கூடிய பெட்டிகளை வைத்திருக்கிறது. ‘எமர்ஜென்சி கால் பாக்ஸ்’ (ECB), சேவ் அவர் சோல்ஸ் (Save our Souls) என்று இந்தப் பெட்டிகளை அழைக்கிறார்கள். இந்தப் பெட்டிக்குள் அருகில் இருக்கும் காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறைகளின் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏதாவது விபத்து, ஆபத்து என்றால் இந்த எண்களை அழுத்தும்போது, கேமரா தானாகவே செயல்பட்டு, அருகில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைச் சொல்லும். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் உள்ளூர் அதிகாரிகள் ஆம்புலன்ஸ், ரோந்து செல்லும் வாகனங்களுக்குத் தகவல் அளித்து, அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் விரைவில் உதவி கிடைக்கும், இனியா.