பொ
ம்மைகள் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஆதி காலம் முதலே மனிதர்கள் பொம்மைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மனிதர்களின் மாதிரி வடிவங்கள்தான் பொம்மைகள். உலகம் முழுவதும் அவரவர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் பொம்மைகள் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க பொம்மைகளைப் பற்றிய அறிமுகம் இங்கே...
பெரிய உருண்டைத் தலை, கை கால் இல்லாத பலூன் உடல். வடக்கு ஜப்பானில் டோஹோகு பிராந்தியத்தைப் பூர்விகமாகக் கொண்டவைதான் இந்த கொகஷி மரபொம்மைகள். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தப் பொம்மைகளின் வரலாறு ஆரம்பமாகிறது. மர வேலை செய்பவர்கள் தங்கள் கைத்தொழில்நுட்பத்தை நிரூபிப்பதற்காக கொகஷி பொம்மைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இன்றைக்குள்ள அளவுக்கு மருத்துவ வசதிகள் அப்போது இல்லை. அதனால் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்பும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்கு ஆசைப்படும் அம்மாக்களின் பிரார்த்தனையின் வெளிப்பாடாகவும் இந்த கொகஷி பொம்மைகள் இருந்துள்ளன.
ஜப்பான் வெந்நீர் ஊற்றுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி என்பதால் மசாஜ் கருவிகளில் ஒன்றாகவும் இந்தப் பொம்மை பயன்படுத்தப்பட்டுள்ளது. கண், காது, மூக்கு எனச் சில கறுப்புத் தீற்றல்கள் மட்டுமே முகத்தில் வரையப்படும். உடலில் கறுப்பு, சிவப்பு, மஞ்சளில் எளிய பூ வேலைப்பாடுகள் இருக்கும். அதிக அலங்காரம் இல்லாமல் இருப்பதுதான் பழைய கொகஷி பொம்மையின் பண்புகள்.
செர்ரி மரத்திலிருந்தும் மிசுகி மரத்திலிருந்தும் கொகஷி பொம்மைகள் செய்யப்படுகின்றன. பொம்மை செய்யத் தொடங்குவதற்கு முன்னர் பல மாதங்கள் பக்குவப்படுத்தப்படும். முதலில் கரடாக மரத்திலிருந்து ஒரு பொம்மையை வெட்டியெடுப்பார்கள். பின்னர் கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைந்து மெருகேற்றுவார்கள்.
தலையையும் உடலையும் தனியாகச் செய்து பின்னர் பொருத்துவார்கள். காலப்போக்கில் பொம்மைகளுக்கு, ஜப்பானியர்களின் பாரம்பரிய கிமோனா உடைகளும் கூடுதல் அலங்காரங்களும் செய்யப்பட்டன.
ஈரத்தன்மையுள்ள மரங்களிலிருந்து செய்யப்படும் கொகஷி பொம்மைகளை வீட்டில் வைத்திருந்தால் தீ விபத்துகளிலிருந்து தடுக்கும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்தான் கொகஷி பொம்மைகளுக்கு வண்ணங்களும் அலங்காரங்களும் அதிகரித்தன.
ஒரு ஜப்பானியக் குழந்தையின் குழந்தைப் பருவத்துடன் சேர்ந்தே இருக்கிறது கொகஷி பொம்மை. அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு அதன் தொலைந்து போன குழந்தைப் பருவம் கொகஷிக்குள் நினைவாகத் தங்கிவிடுவதாக ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆண், பெண் என இரண்டு பாலின கொகஷி பொம்மைகளும் உண்டு.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in