ஜ
ம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தால் ஏரி உலகப் புகழ் பெற்றது. இந்த ஏரியில் படகு சவாரி செய்துகொண்டே தூரத்தில் தெரியும் பனி போர்த்திய மலைகளை ரசிப்பது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். அழகிய தால் ஏரி தற்போது குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனைச் சரி செய்வதற்காகக் களமிறங்கி இருக்கிறார் ஐந்து வயது ஜானட்.
ஸ்ரீநகரில் உள்ள லின்டன் பப்ளிக் பள்ளியில் படித்துவரும் ஜானட், தன் அப்பாவுடன் சேர்ந்து தால் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை அப்புறப்படுத்தி வருகிறார்.
“தண்ணீர் நமக்கு அத்தியாவசியமானது. ஆனாலும் நீர்நிலைகளை நாம் மதிப்பதில்லை. தேவையற்ற குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடாமல், நீர்நிலைகளில் வீசிவிடுகிறோம். இதனால் அற்புதமான இந்தத் தால் ஏரி மாசடைந்துவருகிறது. இங்குள்ள மக்களுக்கு ஏரியின் அருமை புரியும் என்பதால் அவர்கள் ஏரியை அசுத்தம் செய்ய மாட்டார்கள்.
ஆனால் காஷ்மீரின் அழகைக் கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள்தான் படகில் சாப்பிட்டுவிட்டு, ஏரியில் குப்பையைப் போட்டுவிடுகிறார்கள். இயற்கையைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம், இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்” என்கிறார் ஜானட். இவரது விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.