செய்திகளைப் பார்க்கவே முடியவில்லை. இந்த காசா போரை யாராவது நிறுத்த முடியாதா, டிங்கு? - உ. செந்தமிழ், 11-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஓசூர்.
இரண்டு மாதங்களைக் கடந்தும் போர் நடந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் 12 அன்று காசாவில் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் கொண்டுவந்தது. அதை இந்தியா உள்பட153 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பெரும்பாலான உலக நாடுகள் போரை எதிர்த்தாலும் இஸ்ரேல், போரைத் தொடரப் போவதாகவே சொல்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காகூட போர் குறித்துத் தன் கவலையை வெளியிட்டுவிட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளும் சேர்ந்து போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகள் அளிப்பதை நிறுத்தி, இஸ்ரேலைத் தனிமைப்படுத்தினால் போர் நிறுத்தம் வரலாம், செந்தமிழ்.
நம் முடி எப்படி வளர்கிறது என்கிற என் நீண்ட காலச் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பாயா, டிங்கு? - ஆர். நிதின், 1-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர் குலசேகரம், கன்னியாகுமரி.
குளிர், வெப்பம், பனி, காற்று போன்ற தட்பவெப்பச் சூழலால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக உருவானது முடி. தலையை எங்காவது இடித்துக்கொண்டால், அப்போதும்காயம் அடையாமல் நம்மைக் காப்பாற்றுவது முடிதான். இப்படி நம் உடலைப் பாதுகாப் பதற்காக உருவான முடி, புரத இழையால் ஆனது. நாம் பார்க்கக்கூடிய முடி, முடித்தண்டு. இதில் ரத்தக்குழாய்களோ நரம்புகளோ இல்லை. இறந்த செல்களால் ஆன இந்த முடியை வெட்டினால் நமக்கு வலிக்காது. ஆனால், முடியை இழுக்கும்போது வலிக்கிறது அல்லவா, அது முடிவேர். அது தோலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதற்கும் கீழே உள்ள பகுதியில் முடிக்குமிழியில் உள்ள செல்களிலிருந்து முடி முளைத்து வளருகிறது.
இந்த முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ பருவத்தில் தினமும் அரை மி.மீ. நீளத்துக்கு முடி வளரும். இது 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். அடுத்து, ‘கெட்டாஜன்’ பருவம். இது முடி உதிரும் பருவம். இது 2 வாரங்களுக்கு நீடிக்கும். அடுத்தது ‘டீலாஜன்’ பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் அனாஜன் பருவத்துக்குச் சென்று முடி வளர ஆரம்பிக்கும். உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் முளைக்கும். நம் தலையில் பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி நீளமாக வளரும். உதிரும் பருவத்தில் இருந்தால், முடிகள் உதிரும், நிதின்.