பலா, சப்போட்டா போன்ற மரங்களில் பால் வடிவது ஏன், டிங்கு? - என். விஜிலா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.
பப்பாளி, பலா, வேம்பு, ஆல், அத்தி போன்ற மரங்களிலும் கள்ளி, எருக்கு போன்ற செடிகளிலும் பால் வடிகிறது. நீராவிப் போக்கைக் குறைப்பதற்காகத் தாவரங்கள் நீரைத் திட, திரவப் பொருளாக மாற்றி வைத்துக்கொள்கின்றன. தாவரங்களுக்கு இயற்கை வழங்கிய தகவமைப்புதான் இந்தப் பால் வடிதல், விஜிலா.
‘என் இதயம் முழுவதும் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறேன்’ என்றெல்லாம் சொல்கிறார்களே, நினைவுகள் இதயத்தில் இருக்கின்றனவா, மூளையில் இருக்கின்றனவா, டிங்கு? - டி. ஆனந்தி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.
மூளையைப் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இதுவரை அறிந்ததில் பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன என்பது தெரியவந்திருக்கிறது. ‘குறுகிய நினைவாற்றல்’, ‘நீண்ட கால நினைவாற்றல்’, ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ என்று மூன்று வகை நினைவாற்றல்கள் இருக்கின்றன. நம்முடைய புலன்களிலிருந்து வரும் செய்திகளை லிம்பிக் சிஸ்டம் பெருமூளையின் முன்பகுதிக்கு அனுப்பிவைக்கிறது. ஒலியாகவோ காட்சியாகவோ உணர்வாகவோ பெருமூளை இவற்றைச் சேமித்துக்கொள்கிறது. அன்றாடம் ஏராளமான செய்திகளை மூளை சேமித்து வைக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை புதிய செய்திகள் வரும்போது அழிந்துவிடுகின்றன.
மறக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப நினைவில் வைக்கப்படும் செய்திகள் ‘நீண்ட கால நினைவாற்ற’லாக நின்றுவிடுகின்றன. வாகனங்களை ஓட்டுவது, இசைக் கருவிகளை வாசிப்பது போன்றவை ‘திறமை சார்ந்த நினைவாற்ற’லாக இருக்கின்றன. எனவே நினைவாற்றலுக்குக் காரணம், மூளைதான் ஆனந்தி. பிறகு எப்படி இதயம் அந்த இடத்துக்கு வந்தது என்றால், ஆரம்பக் காலத்தில் எகிப்தியர்களும் கிரேக்கர்களும் சிந்தனையையும் உணர்வையும் இதயம் கட்டுப்படுத்துவதாகக் கருதினர். அது அப்படியே நிலைபெற்றுவிட்டது. இன்று அறிவியல் எவ்வளவோ வளர்ந்து, மூளைதான் மனித உடலின் அனைத்து இயக்கத்துக்கும் காரணம் என்று தெரிந்துவிட்டாலும் இதயத்தை மனிதர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மூளையைவிட இதயத்தின் அமைப்பு கவரக்கூடியதாக இருப்பதும் ஒரு காரணம்.