சிறுகுடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்குடல் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ளது. சிறுகுடலைப் போலவே இதிலும் பல பகுதிகள் உண்டு. சிறுகுடல் பெருங்குடலில் இணையும் பகுதிக்குப் ‘பெருங்குடல் முனை’ (Caecum) என்று பெயர். இதைத் தொடர்ந்து ஏறுகுடல் (Ascending colon), குறுக்குக் குடல் (Transverse colon), இறங்கு குடல் (Descending colon), வளைகுடல் (Sigmoid colon), மலக்குடல் (Rectum) எனப் பல பகுதிகளாகப் பெருங்குடல் பிரிந்து மலத்துவாரத்தில் முடிகிறது.
சிறுகுடலின் உள்விட்டம் குறைவாக இருக்கும். பெருங்குடலின் உள்விட்டம் அதிகமாக இருக்கும். சிறுகுடலின் வெளிச்சுவர்கள் ஒன்றுபோல் வழவழப்பாக இருக்கும். பெருங்குடலின் வெளிப்பரப்பு சில இடங்களில் உப்பியிருக்கும்; பல இடங்களில் சுருங்கி இருக்கும்; தடிமனாகவும் இருக்கும்.
தாவர உண்ணிகளில் பெருங்குடலின் நீளம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, பெருங்குடல் முனை அகலமாக இருக்கும். இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு இது குறுகலாகத்தான் இருக்கும். தாவர உணவு செரிக்கப்படுவதற்குத் தாமதமாகும். மேலும் அவை முழுவதுமாகச் செரிக்கப்பட்டு உடலுக்குள் சேருவதற்குக் குடலில் நீண்ட நேரம் தங்க வேண்டியது இருக்கும். பறவைகளில் கிளிகளுக்கு மட்டும் பெருங்குடல் முனை இல்லை.
பெருங்குடலில் அமைந்திருக்கும் சுரப்பி செல்கள் தண்ணீர் மாதிரியான திரவத்தையும், மியூக்கஸ் எனும் வழுவழுப்பான திரவத்தையும் சுரக்கின்றன. செரிமான மண்டலத்தில் என்சைம்கள் சுரக்கப்படாத பகுதிகள் மொத்தம் இரண்டு. முதலாவது உணவுக்குழாய். அடுத்தது, பெருங்குடல்.
பெருங்குடலில் பாக்டீரியாக்கள் நிறைய உள்ளன. பாக்டீரியா என்றாலே கெடுதல் செய்யும் கிருமி என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். இந்த பாக்டீரியாக்கள் அப்படியில்லை. இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள். இவை புரத உணவு செரிமானத்துக்கும் சில வைட்டமின்களின் உற்பத்திக்கும் உதவுகின்றன.
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் ‘செல்லுலோஸ்’ எனும் உணவுப்பொருளைச் செரிக்கவும் பெருங்குடல் பாக்டீரியாக்கள் உதவுகின்றன. குதிரை, யானை, முயல் உள்ளிட்ட தாவர உண்ணிகளின் பெருங்குடல் மிக நீளமாக இருப்பதால், அவற்றின் உணவில் உள்ள ‘செல்லுலோஸ்’ எனும் நார்ப்பொருள் நன்றாகச் செரிமானம் ஆகின்றன. ஆனால், மனிதர் உள்ளிட்ட பாலூட்டிகளுக்குக் குடலில் செல்லுலோஸ் செரிக்கப்படுவதில்லை. பசு, எருது போன்ற அசைபோடும் விலங்குகளுக்கு இரைப்பையிலேயே செல்லுலோஸ் செரிக்கப்பட்டுவிடும்.
பாக்டீரியாவே இல்லாத பெருங்குடலும் நமக்கு இருக்கிறது. அது எப்போது தெரியுமா? தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போதும், பிறந்த உடனேயும் நம் குடலில் பாக்டீரியாக்கள் கிடையாது. அதற்குப் பிறகுதான் வளி மண்டலம் வழியாக பாக்டீரியாக்கள் குடலுக்குள் நுழைகின்றன.
பெருங்குடல் செய்யும் முக்கியமான பணி, திரவத்தை உறிஞ்சுவது. எப்படி? சிறுகுடலில் உள்ள உணவுக்கூழ் செரிக்கப்பட்டு, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு உடலுக்குள் சேர்ந்ததும், மீதமுள்ள உணவு திரவக்கூழாகப் பெருங்குடலுக்கு வந்து சேரும். இதன் அளவு ஒன்றரை முதல் இரண்டு லிட்டர்வரை இருக்கும். இதில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கும். இதிலிருந்து ஒன்று முதல் ஒன்றரை லிட்டர்வரை உள்ள தண்ணீரையும் உடலுக்குத் தேவையான தாதுச்சத்துகளையும் பெருங்குடல் உறிஞ்சிக்கொள்கிறது.
இவ்வாறு உறிஞ்சப்பட்ட பிறகு, மீதமுள்ள திரவக்கூழ் கெட்டிப்பட்டு, தேவையில்லாத கழிவுப் பொருளாகிறது. அதுதான் மலமாக வெளியேறுகிறது.
சரி, வாயில் போடப்பட்ட உணவு உணவுக்குழாய் வழியாக குடலுக்கு எப்படி வருகிறது? உணவால் தானாகப் பயணிக்க முடியாது. அதன் பயணத்துக்குக் குடலின் அசைவுகள் உதவுகின்றன. குடல் ஒரு குழாய் போன்று இருப்பதாகக் கூறினாலும், ரயில் பெட்டிகள்போல் பகுதிகளாகவே காணப்படுகிறது. ஒரு பகுதி சுருங்கும்போது, அதற்கு அடுத்த பகுதி விரிகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியும் அலை அலையாகச் சுருங்கி விரியும்போது, அதிலுள்ள உணவு அடுத்தப் பகுதிக்குத் தள்ளப்படுகிறது. இந்தச் செயலுக்குக் ‘குடலியக்கம்’ (Peristalsis) என்று பெயர். ஒரு பகுதி விரிந்து சுருங்குவதை ‘ஓர் அலை இயக்கம்’ என்கிறோம். இதற்கு 9 விநாடி ஆகிறது.
பெருங்குடல் முனையின் அடிப்பகுதியில் ஒரு நீண்ட மிளகாய் அளவில் ‘குடல்வால்’ (Vermiform Appendix) உள்ளது. உடலில் உள்ள ‘வெஸ்டீஜியல் உறுப்பு’ (Vestigial organ) இது. அதாவது, ‘உடலுக்கு உதவாத உறுப்பு’ என்று பெயர். இதில் நிறைய நிணநீர்த் திசுக்கள் உள்ளன. பல தலைமுறைகளுக்கு முன்னால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் உறுப்பாகச் செயல்பட்டது. அதன் பிறகு அந்த வேலையை உடலில் உள்ள மற்ற நிணநீர் உறுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கியதால், குடல்வாலின் தேவை குறைந்துவிட்டது. அதனால், இப்போது இது அளவில் சுருங்கி ‘சும்மா’ இருக்கிறது.
இறந்த பிறகு சிறுகுடல் 7 மீட்டர் நீளத்துக்கும், பெருங்குடல் ஒன்றரை மீட்டர் நீளத்துக்கும் வளர்ந்துவிடுகிறது. எப்படி? உயிரோடு இருக்கும்போது சுருக்குப்பைபோல் சுருண்டு இருக்கும் குடல் தசைகள், இறந்த பிறகு தளர்ந்து விரிந்து நீண்டுவிடுகின்றன!
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com