கடல் பயணங்கள்
பயணங்கள் சுவாரசியமானவை. கடல் பயணிகளால்தான் வரலாறு புதிதாக எழுதப்பட்டிருக்கிறது. கண்டங்கள், நாடுகள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், இயற்கை வளங்களின் அறிமுகம் கிடைத்தது. புதிய பாதைகள் உருவாக்கப்பட்டு, வியாபாரம் செழித்து வளர்ந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேற்றம் கண்டன. இவ்வளவு நன்மைகளைக் கொடுத்த கடல் பயணங்கள் சில தீமைகளையும் கொண்டுவந்தன. சில நாடுகள் பல நாடுகளை அடிமைப்படுத்தின. செல்வங்களைக் கொள்ளையடித்தன. நமக்கு நன்கு அறிமுகமான இந்தியாவைக் கண்டுபிடித்த வாஸ்கோ ட காமா, அமெரிக்காவைக் கண்டுபிடிக்காத கொலம்பஸ், அமெரிக்காவைக் கண்டுபிடித்த அமெரிகோ வெஸ்புகியிலிருந்து அதிகம் அறியாத இபின் பதூதா, பார்த்தலோமியா டயஸ், ஜான் கபோட், ஜேம்ஸ் குக் போன்ற 13 கடல் பயணிகளின் சுவாரசியமான அனுபவங்கள் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
மருதன், கடல் பயணங்கள், விலை ரூ. 130/-,
கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், ஆம்பல்ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14.
தொடர்புக்கு: 044 4200 9603
நன்னெறிக் கதைகள்
அண்ணனின் கடனை அடைப்பதற்காக காந்தி, தன் கையிலிருந்த தங்கக் காப்பை வெட்டிக் கொடுத்துவிட்டார். பெற்றோருக்குத் தெரியாமல் செய்த இந்தக் காரியம் அவரை நிம்மதியிழக்க வைத்தது. அதனால் ஒரு கடிதம் எழுதி, தனக்குத் தண்டனை அளிக்கும்படி தன் அப்பாவிடம் கேட்டார் காந்தி. அவரோ தண்டனை அளிக்காமல் கண்ணீர்விட்டார். இதைப் பார்த்து இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என்று முடிவெடுத்தார் காந்தி. இதுபோன்ற சம்பவங்கள், கதைகள் போன்றவற்றைத் தொகுத்து, 50 நன்னெறிக் கதைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதைகளுக்குப் படங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மணிகண்டன், நன்னெறிக் கதைகள், விலை ரூ.65/-,
பரத் புக்ஸ், 23/11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 15.
தொடர்புக்கு: 94442 70017
அறம் செய்ய விரும்புவோம்!
ஆதித்தன் பிறந்தாள் கொண்டாட்டத்துக்கு வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். அவனோ ஆதரவற்றவர்கள் இல்லத்தில் ஒரு நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்றும் அவர்களுடன் சாப்பிட வேண்டும் என்றும் முடிவு செய்கிறான். ’அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் உள்ள முதல் நாடகம் இது. ஒளவையாரின் ஆத்திச்சூடியை வைத்து ஏராளமான கதைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. நாடக பாணியில் கதைகள் சொல்வதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலத்தில், ஆத்திச்சூடியை நாடக வடிவில் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்தக் காலச் சூழலுக்கு ஏற்றவாறு 13 நாடகங்கள் எழுதப்பட்டிருப்பதோடு, முழுப் பக்க ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
மோ. கணேசன், அறம் செய்ய விரும்புவோம்!, விலை ரூ. 50/-,
புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18.
தொடர்புக்கு: 044 2433 2424