ஆ
தி மனிதர்கள் மழை, விலங்குகள், இருட்டு போன்றவற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குகைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகள் குகைகளில் உள்ள ஓவியங்களில் இருந்தும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான குகை வாழ் இடங்கள் இந்தியாவில் இருந்தாலும் சில குகைகள் அவற்றின் காலத்தாலும், அமைப்பாலும் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலும் குகை முக்கியமானது.
இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய குகையும் சமவெளியில் அமைந்துள்ள மிக நீளமான குகையும் இதுதான்! இது நிலத்தடி நீரோட்டங்களால் அமைந்த இயற்கையான குகை. குவார்ட்ஸ் மற்றும் கறுப்பு சுண்ணாம்புக்கல்லால் ஆனது. குகையின் கூரைகளில் கூம்பு வடிவ அமைப்புகள் காணப்படுகின்றன.
கி.மு. 4500-ல் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை இங்கிருந்து கண்டெடுத்துள்ளனர். மிகப் பழமையான குகையாக இருந்தாலும், வெளி உலத்துக்கு நீண்ட காலம் தெரியவில்லை. உள்ளுர் மக்களுக்கு மட்டும் இதைப் பற்றித் தெரிந்திருக்கிறது.
கி.பி 1884-ல் பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட், பேலும் குகையைக் கண்டறிந்தார். அதற்குப் பிறகும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டும் இடமாகப் பயன்படுத்தினர்.
1992-ல் டேனியல் கெபார் என்ற ஜெர்மனியர் தலைமையிலான குழுவினர், இந்தக் குகையைப் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து, இதன் மகத்துவத்தை உலகறியச் செய்தனர். நாராயண ரெட்டி, சலபதி ரெட்டி ஆகியோர் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக, 1999-ல் ஆந்திர அரசு இதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.
2002-ம் ஆண்டிலிருந்து ஆந்திரா வின் முக்கியமான சுற்றுலாத் தலமானது. 3.5 கி.மீ. நீளம் கொண்ட பேலும் குகையில் 1.5 கி.மீ. நீளம் வரையே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன் புத்த, ஜைன துறவிகள் தங்கவும் தியானம் செய்யவும் உதவியாக இருந்திருக்கிறது இந்தக் குகை. புத்தத் துறவிகள் பயன்படுத்திய பொருட்களை இங்கிருந்து எடுத்து அருகில் உள்ள அனந்தபூர் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 150 அடி ஆழத்தில் சிறிய நீர்வீழ்ச்சி இங்கே இருக்கிறது.
இதைப் பாதாள கங்கை என்கிறார்கள். குகைக்குள் சில இடங்கள் சமதரையாக உள்ளன. சில இடங்களைக் கடக்க மிக குறுகிய வழியே உள்ளது. வெளியிலிருந்து பார்க்கும்போது சிறிய குகையாகக் காட்சியளித்தாலும், 90 அடி இறங்கியவுடன் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
குகைக்குள் ஒளி விளக்குகளும் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. குகை முழுவதும் இயற்கையாக பலவித உருவங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
தொடர்புக்கு: mangai.teach@gmail.com