மாதங்கி கேள்வியின் தொடர்ச்சியாக என் கேள்வி. முன்னோர்கள் காரணம் இன்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதால்தான் வீட்டில் உள்ளவர்களும் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்கிறார்கள். உதாரணத்துக்கு, ஏன் இரவு நேரத்தில் நகம் வெட்டக் கூடாது என்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்வோம் அல்லவா, டிங்கு? - வி. நந்தினி, 9-ம் வகுப்பு, நோபல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
முன்னோர்கள் சொல்வதில் சில விஷயங்களுக்கு நியாயமான காரணம் இருக்கலாம். சில விஷயங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணங்களை இன்று ஏற்றுக்கொள்ள இயலாது. இரவு நேரத்தில் நகம் வெட்டக் கூடாது என்பதற்கு, அந்தக் காலத்தில் மின்சார வசதி இல்லை. இரவு நேரத்தில் நகத்தை வெட்டும்போது நகத்துண்டுகள் தரையில் விழலாம். அது கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். நடக்கும்போது காலில் குத்தலாம். குழந்தைகள் தெரியாமல் வாயில் போட்டுவிடலாம் என்பதற்காக இரவில் நகம் வெட்டக் கூடாது என்று சொல்லியிருப்பார்கள். அந்தக் காலத்தில் சொன்ன இந்தக் காரணத்தை நானும் ஏற்றுக்கொள்வேன்.
இன்று பகல்போல் இரவிலும் வெளிச்சம் இருக்கும்போது நகம் வெட்ட வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கிறேன். வெளியே யாராவது புறப்படும்போது தலைவிரித்திருந்தால், பூனை குறுக்கே சென்றால் காரியம் கைகூடாது என்பது எல்லாம் வெறும் நம்பிக்கை சார்ந்தது. தலைமுடியைப் பின்னாமல் (‘ஃப்ரீ ஹேர்’) செல்வது என்பது இன்றைய ஃபேஷனாகிவிட்டது. அதனால், பழைய காரணத்தை இன்று ஏற்றுக்கொள்ள முடியாதுதானே? அதேபோல் பூனை என்பது நம்மைப்போல் ஓர் உயிரினம். அது குறுக்கே செல்வதால், நாம் செய்யக்கூடிய காரியங்கள் எப்படித் தடைபடும்? ஒருகாலத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுவதாக நம்பப்பட்டது.
ஆனால், சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட பிறகு, நாம் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டோம் அல்லவா? அதேபோலதான் அந்தக் காலத்தில் இதுபோன்ற விஷயங்களை நம்பிக்கொண்டு இருந்திருக்கலாம். இன்றும் அதே கருத்தை நம்புவதில் அர்த்தம் இல்லைதானே, நந்தினி?
ஒரு பொருளைச் சூடாக்கினால் ஏன் விரிவடைகிறது, டிங்கு? - எம். கீர்த்தனா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
ஒரு பொருளை வெப்பப் படுத்தும்போது, அந்தப் பொருளில் உள்ள மூலக்கூறுகள் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, வேகமாக நகர ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக மூலக் கூறுகளுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கிறது. அதனால் அந்தப் பொருள் விரிவடைய ஆரம்பிக்கிறது, கீர்த்தனா.