பட்டாசுத் தொழிற்சாலை விபத்துச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இந்த விபத்துகளைத் தவிர்க்க இயலாதா, டிங்கு? - எஸ். ஸ்ரீஹரி, 3-ம் வகுப்பு, வாஹீஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமத்தூர், கோவை.
விபத்துகள் நடக்கும் ஆபத்து அதிகமுள்ளவை பட்டாசுத் தொழிற்சாலைகள். விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான சில சட்டதிட்டங்கள் அந்தத் தொழிற்சாலைகளுக்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொழிற்சாலைகள் அவற்றைப் பின்பற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. காற்றோட்டமான இட வசதி, தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான உபகரணங்கள், தொழிலாளர்களுக்குப் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை.
பாதுகாப்பற்ற சூழலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும்போது, விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன. பட்டாசுத் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் பேராசைப்படாமல் மனித உயிர்களை மதித்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தி, பயிற்சியும் அளித்தால் விபத்துகள் நடக்காது, ஹரி. இப்படிச் சட்டதிட்டங்களைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இணையதளத்தில் CAPTCHA CODE என்பது என்ன, டிங்கு? - ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதரா, ரோபாட்டா என்று கண்டுபிடிப்பதற்காக இப்படி ஒரு பரிசோதனை வைக்கப்படுகிறது. கொடுக்கப்படும் கேள்விகளுக்கு மனிதர்கள் ரோபாட்டைவிட மெதுவாகப் பதில் அளிப்பார்கள். சில தடுமாற்றங்கள் ஏற்படும். அதை வைத்து மனிதர்தான் என்று உறுதிசெய்துகொள்ளும்.
ஒருவேளை ரோபாட்டைப் போலவே நீங்கள் வேகமாக பதில் அளித்தால், மனிதர்தானா என்பதை உறுதி செய்துகொள்ள அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கும். நீங்கள் பதில் சொல்வதற்குள் நம் பிரெளசிங் ஹிஸ்டரியை ஆராய்ந்து, நாம் மனிதர்தான் என்பதை உறுதிசெய்துகொண்டு, நம்மை தளத்துக்குள் அனுப்பும், இனியா.
செடியில் உள்ள இலைகள் ஏன் மஞ்சள் வண்ணத்துக்கு மாறுகின்றன, டிங்கு? - ஆர். ஆர்த்தி, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
செடிக்கு அதிகமாகத் தண்ணீர் விட்டாலும் குறைவாகத் தண்ணீர் விட்டாலும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாவிட்டாலும் மஞ்சள் நிறமாக மாறும். சிறிய தொட்டியில் இருந்து வளர்வதற்கு இடம் இல்லை என்றாலும் மண் வளமாக இல்லாவிட்டாலும் இலைகள் மஞ்சள் வண்ணமாக மாறும், ஆர்த்தி.