மாயா பஜார்

காகித மீன்காட்சியகம்

செய்திப்பிரிவு

வண்ண வண்ண மீன்களை மீன் அருங்காட்சியகத்துக்கு சென்று பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவே ரொம்ப ஜாலியாக இருக்கும் அல்லவா? உங்கள் வீட்டில் சில பொருட்கள் இருந்தால் போதும். வீட்டிலேயே கண்ணைக் கவரும் மீன் காட்சியகத்தைச் செய்து மகிழலாம். அப்படியான ஒரு மீன் காட்சியகத்தைக் காகிதத்திலேயே செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்கள்:

# பேப்பர் பிளேட் -1

# கூரைகளுக்குப் பயன்படும் நீல நிற ஃபெல்ட் பேப்பர் ஒரு ஷீட்

# தடித்த பிளாஸ்டிக் ஷீட் ஒன்று

# வண்ண பளபளப்பு காகிதம்

# கத்தரிக்கோல்

# பசை, டேப், ஸ்டேப்ளர், நூல்

# கிரயான்கள் அல்லது மார்க்கர்கள்

செய்முறை:

1 பேப்பர் பிளேட்டைத் திருப்பிப் போட்டு அதில் ஒரு வட்டம் வரையவும். அதை வெட்டி எடுக்கவும். அதன் நடுவில் இருக்கும் பெரிய துளை மீன் காட்சியகத்தின் ஃபிரேம் போல இருக்கும்.

2 இதே போல் பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு வட்டம் வரையவும். இது ஏற்கெனவே வெட்டி வைத்திருக்கும் ஷீட்டின் நடுவில் உள்ள பெரிய துளையைவிட ஒரு செ.மீ. அதிகமாக இருக்க வேண்டும். வரைந்த பின்னர் பிளாஸ்டிக் ஷீட் வட்டத்தை வெட்டி எடுக்கவும். இதை ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த பேப்பர் பிளேட் பிரேமில் உள்பக்கமாக ஒட்டவும்.

3 இப்போது நீல நிற ஃபெல்ட் பேப்பரில் ஒரு வட்டம் வரைந்து வெட்டி எடுக்கவும். இதை பேப்பர் பிளேட்டின் மீது ஒட்டவும். செடிகளையும் பவழங்களையும் மீன்களையும் வண்ணப் பளபளப்பு காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அல்லது பழைய புத்தகங்களில் இருந்தும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.

4 இந்தச் செடிகளையும் பவழங்களையும் நீல நிற பெல்ட் பேப்பர் பிளேட்டில் ஒட்டவும். மீன்களின் பின்னால் நூலை ஒட்டி அதன் மறு முனையை பேப்பர் பிளேட்டின் உச்சியில் ஒட்டவும். இதனால் மீன்கள் நீந்துவது போல் தோன்றும்.

5 இப்போது இரண்டு பிளேட்களையும் ஒட்டவும் அல்லது ஸ்டேப்ளரால் இணைக்கவும்.

இப்போது வட்ட வடிவ ஜன்னல் வழியே மீன்கள் நீந்துவது போல் தோன்றுவது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

2014 Amrita Bharati, Bharatiya Vidya bhavan

SCROLL FOR NEXT