மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: போர் இல்லாத உலகம் சாத்தியமா? :

செய்திப்பிரிவு

போரினால் எவ்வளவு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. போர் இல்லாத உலகம் சாத்தியமா, டிங்கு? - ர. வர்ஷிதா, 11-ம் வகுப்பு, நாச்சியார் வித்யாலயம், ஜமீன் ஊத்துக்குளி, கோவை.

ஒரு போர் ஆரம்பிப்பதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், போர் மனிதகுலத்துக்குத் தீங்கானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தது. லட்சக்கணக்கான மனித உயிர்களை இழந்தது. பொருளாதாரத்தை இழந்தது. ஒரு நாடு இழந்த பொருளாதாரத்தை, செல்வத்தை 20, 30 ஆண்டுகளில் பெற்றுவிடலாம்.

ஆனால், இழந்த மனித உயிர்களை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடியுமா? உங்களையும் என்னையும்போல சாதாரண மனிதர்கள், போர் வேண்டாம் என்று நினைக்கிறோம். போர்களை நடத்தும் நாடுகளில் இருக்கும் மக்களும் போர் வேண்டாம் என்றே நினைக்கிறார்கள்.

ஆனால், அரசாங்கங்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொள்ளாமல், தங்கள் அரசியல், ஆயுத வியாபாரத்துக்காகப் போர்களை நடத்தத் தயக்கம் காட்டுவதில்லை. இன்றுகூட உணவு இல்லாத, பாதுகாப்பான குடிநீர் இல்லாத, தங்குவதற்கு இடம் இல்லாத மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சூழல் மாசு அடைந்து வருகிறது. இன்னும் எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டறிய வேண்டியிருக்கிறது. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி, அனைத்து நாட்டு அரசாங்கங்களும் சேர்ந்து தீர்வு காண முயல வேண்டும். அதுதான் முன்னேற்றம். அதை விட்டுவிட்டு, போர்களில் எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் இழப்பது, மனிதகுலத்தைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிடும்.

போட்டி, பொறாமை, நான் உயர்ந்தவன் போன்ற எண்ணங்களை அரசாங்கங்கள் கைவிட்டு, மனித உயிர்களையும் இந்தப் பூமியையும் உயர்வாக நினைக்கும்போதுதான் போர் இல்லாத உலகம் சாத்தியமாகும். அதுவரை போர் இல்லாத உலகம் உருவாவதற்கான அனைத்து முயற்சிகளையும் சாதாரண மக்களாகிய நாம் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருப்போம்!

SCROLL FOR NEXT