நம் பற்கள் ஏன் வெள்ளையாக இருக்கின்றன, டிங்கு?
- அன்சஃப் ஜகபர், 7-ம் வகுப்பு, செயின்ட் பிரான்சிஸ் அசிசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மார்தால், கன்னியாகுமரி.
மனிதப் பற்களின் வெளிப்பகுதி எனாமல் எனப்படும் திசுக்களால் ஆனது. எனாமல் ஹைட்ராக்ஸிபடைட் எனும் கால்சியம் பாஸ்பேட் போன்ற பல்வேறு தாதுக்களால் ஆனது. கால்சியத்தின் நிறம் வெள்ளை. எனவே பற்களின் நிறம் வெளையாக இருக்கிறது. எனாமலின் தடிமனைப் பொறுத்து பற்களின் நிறம் மங்கிய வெள்ளையாகவோ, பிரகாசமான வெள்ளையாகவோ காணப்படும், அன்சஃப் ஜகபர்.
உச்சி வெயிலில் சூரியனை நேரடியாக ஏன் பார்க்கக் கூடாது, டிங்கு?
- த. தன்யா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
உச்சி வெயிலில் சூரியனை நம்மால் வெறுங்கண்களால் பார்க்க இயலாது. ஒருவேளை பார்க்க முயன்றாலும் சூரியனின் சக்திவாய்ந்த ஒளி, நம் கண்களைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தலாம். அதற்காகவே சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்கிறார்கள், தன்யா.
பேய் ஏன் இருட்டான இடத்தில் மட்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள், டிங்கு?
- கா. ரம்யா, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
மனிதர்களுக்கு இருளைக் கண்டும் பயம், இல்லாத பேயைக் கண்டும் பயம். பகலில் பேய் இருக்கிறது என்று சொன்னால், ஏதாவது ஓர் உருவத்தைக் காட்ட வேண்டும். இருள் என்றால், இருளோடு இருளாக இருப்பதாகக் கதைவிட்டு விடலாம். அதனால், கதைவிடுவதற்கு இருள் வசதி என்பதால் பேயையும் இருளில் வைத்திருக்கிறார்கள், ரம்யா.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த நாடு கோப்பையை வாங்கும், டிங்கு?
- வி. நித்திலன், 7-ம் வகுப்பு, ஆர்.சி. மெட்ரிக். பள்ளி, சிவகங்கை.
விளையாட்டுகளைப் பொறுத்தவரை வலுவான அணியும் இறுதியில் கோப்பையைப் பெற இயலாமல் போகலாம். சாதாரண அணியும் கோப்பையை வெல்லலாம். அதனால், இந்த நாடுதான் கோப்பையை வாங்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. வலுவான, திறமையான அணி கோப்பையை வென்றால் மகிழ்ச்சி. உங்களைப் போலவே இந்தியா வெல்ல வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இருப்பது வேறு விஷயம், நித்திலன்.