மாயா பஜார்

வாழ்க்கை அனுபவம்- சிறு வயதில் கற்ற துணிச்சல்

ஜே.சி.ஜெரினாகாந்த்

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஜிக்குக் குழந்தைகளைப் பிடிக்கும், ரோஜாப்பூ பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், அவருக்கு குதிரையும் குதிரையேற்றமும் மிகவும் பிடிக்கும் என்பது தெரியுமா?

இந்தியாவின் நேரு சிறுவனாக இருந்தபோதே அவரது தந்தை மோதிலால் நேரு குதிரையேற்றம் கற்றுக் கொடுத்தார். அப்போது நேருவுக்கு எட்டு வயதுதான் இருக்கும். ஒருநாள் குதிரைச் சவாரிக்கு ஜவஹர்லால் நேரு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து குதிரை மட்டும் தனியாக மாளிகைக்கு வந்தது. இதைக் கண்டதும் நேருவுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என அவரது தந்தை பதறினார். உடனே பணியாட்களை அனுப்பி தேடச் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து நேரு தன் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தார்.

“நேரு என்ன ஆச்சு” என்று அவரது தந்தை கேட்டார்.

நேருவோ, “அப்பா, குதிரையை நான் வேகமாக விரட்டினேன். ஓரிடத்தில் அது என்னைக் கீழே தள்ளிவிட்டு நிற்காமல் ஓடியேவிட்டது. நான் அதை ஒருநாள் அடக்கியே தீருவேன்” என்று உறுதியாகச் சொன்னார்.

குதிரை தள்ளியதால் இனி குதிரை ஏற மகன் பயந்துவிடுவானோ மகன் என எண்ணிய அவரது தந்தை, ‘குதிரையை அடக்குவேன்’ என்று நேரு துணிச்சலாகக் கூறியதை கண்டு பெருமிதம் அடைந்தார்.

சொன்னது போலவே, ஜவர்ஹால் நேரு குதிரையை அடக்கியும் காட்டினார். பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க, சிறு வயதிலேயே அவரிடம் இருந்த இந்தத் துணிச்சல்தான் காரணமாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்று அவர் சாதிக்கவும் இந்தத் துணிச்சல்தான் காரணம்.

துணிச்சலும், விடாமுயற்சியும் இருந்தால், சாதனை செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் அல்லவா?

SCROLL FOR NEXT