குளத்துக்கும் ஏரிக்கும் என்ன வித்தியாசம், டிங்கு? - ஹ. ப்ரணேஷ் ராகவ், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
ஏரி அளவில் மிகப் பெரியது. குளம் அளவில் சிறியது. ஏரியின் ஆழமும் தண்ணீரின் அளவும் அதிகமாக இருக்கும். குளத்தின் ஆழமும் தண்ணீரின் அளவும் குறைவாக இருக்கும்.
குளத்தைச் சுற்றிலும் மண்ணாலான கரை உண்டு. ஏரி கரையோடும் கரை இல்லாமலும் பரந்துவிரிந்து காணப்படும். குளத்து நீரைக் குறிப்பிட்ட பகுதியில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஏரியில் உள்ள நீர் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பயன்படும், ப்ரணேஷ் ராகவ்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப் போகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் உனக்கு மிகவும் பிடித்த வீரர் யார், ஏன், டிங்கு? - ஜி. டேனியல் பிரபு, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் பலரைப் பிடிக்கும் என்றாலும் ஒருவரை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், கபில் தேவ். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஆட்டத்தை எதிர்காலத்திலும் பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள்.
அது மட்டுமன்றி, ஆல் ரவுண்டரான கபில் தேவ் மிகச் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர். விளையாட்டைத் தாண்டி அவரிடம் நட்புணர்வு இருக்கும். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். மிகத் துணிச்சலாகத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தக்கூடியவர். டி20 விளையாட்டை உருவாக்கியவர். விளையாட்டிலும் தனிப்பட்ட முறையிலும் நேர்மையானவர். இப்படிப் பல காரணங்களால் இவரைப் பிடிக்கும், டேனியல் பிரபு.
பூனையும் நாயும் ஏன் சண்டை போட்டுக்கொள்கின்றன, டிங்கு? - ர. தமிழரசன் 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
பூனையும் நாயும் வெவ்வேறு பண்புகள், பழக்கவழக்கங்கள் கொண்ட வெவ்வேறு இனங்கள். நாய்கள் சேர்ந்து வாழக்கூடிய சமூக விலங்குகள். பூனைகள் தனிமை விரும்பிகள். வேட்டையாடக்கூடியவை. நாயும் பூனையும் சமிக்ஞைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது சண்டை வருவதற்கான சூழல் உருவாகிறது.
உணவு, நம் கவனம் போன்றவற்றுக்காகப் போட்டி ஏற்படும்போது அதுவும் சண்டைக்குக் காரணமாகிவிடுகிறது. பூனை, நாய் இரண்டையும் வளர்ப்பவர் வீடுகளில் இவை இரண்டும் அன்பாக விளையாடிக்கொள்வதைப் பார்க்க முடியும், தமிழரசன்.