மனிதர்களைப் போல உணவைச் சேமித்து வைக்கும் வழக்கம் பிற உயிரினங்களிடம் இருக்கிறதா, டிங்கு?
- எம். இம்மானுவேல் பிரபு, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி.
சில விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உணவைச் சேமித்து வைப்பது உண்டு, இம்மானுவேல் பிரபு. நம் வீடுகளில் இருந்து உணவுத் துணுக்குகளை எடுத்துச்செல்லும் எறும்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை உணவைத் தங்கள் புற்றுக்கு எடுத்துச் சென்று, சேமித்து வைக்கின்றன.
அணில், எலி போன்ற சில விலங்குகளும் உணவைச் சேமித்து வைக்கின்றன. மரங்கொத்தி போன்ற சில பறவைகள் பருப்புகளையும் கொட்டைகளையும் சேமித்து வைக்கின்றன. சில விலங்குகள் உணவு கிடைக்கும் காலத்தில் நன்றாகச் சாப்பிட்டு, உடலிலேயே ஆற்றலாகச் சேமித்து வைத்துக்கொள்கின்றன. உணவு கிடைக்காதபோது, இந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொண்டு உயிர் பிழைக்கின்றன.
தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை, டிங்கு?
- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
தங்கம் குறைந்த வினைதிறன் கொண்ட உலோகம். இரும்பைப் போல் காற்றுடனும் ஈரப்பதத்துடனும் எளிதில் அது வினைபுரிவதில்லை. ஆக்சிஜன், அமிலம் போன்ற எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை. நிலையான உலோகம் என்பதால் தங்கம் துருப்பிடிப்பதில்லை, இனியா.
என் மாமா மிகவும் நல்லவர். எல்லாருக்கும் உதவுவார். அவர் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாரும் வாழ்த்துவார்கள். அவரை இப்போது இழந்துவிட்டோம். ஒருவர் செய்யும் நல்ல விஷயங்கள் அவரைக் காப்பாற்றாதா, டிங்கு?
- ஆர். காஞ்சன மாலா, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கம்பம்.
உங்கள் வருத்தம் புரிகிறது காஞ்சன மாலா. ஒருவர் நல்லவராக இருப்பது அவருடைய இயல்பான குணம். எதையும் எதிர்பார்த்து அவர் இப்படிச் செய்திருக்க மாட்டார். தானம், தர்மம் செய்தால் எந்தக் குறையும் இல்லாமல் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நாமாகவே ஒரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் செய்த நல்ல செயல்கள் நம் ஆயுளைக் கூட்டிவிடும் என்று நினைக்கிறோம். அதனால் நல்லது செய்தவர்கள் இறக்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நல்லவற்றை நினைப்பதும் நல்லவற்றைச் செய்வதும் மனிதர்களின் அடிப்படைக் குணம்.
அந்த நல்ல குணத்தால்தான் உங்கள் மாமாவை இப்போதும் எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இனி எப்போதுமே அந்த மாமா நல்லவிதமாக உங்கள் மனங்களில் வாழ்வார். ஒருவர் நல்லவராக வாழ்வது, அவர் வாழ்க்கை முடிந்த பிறகும் இந்த உலகில் அவருடைய பெயர் நல்லவிதமாக நிலைத்திருக்க வைத்திருக்கிறது. இதை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.
சில மரங்களில் வேறு தாவரங்கள் எப்படி வளருகின்றன, டிங்கு?
- சு. ஓவியா, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
மரங்களின் மீது ஒட்டிக்கொண்டு வாழும் சில தாவரங்களை Epiphytes (ஒட்டுண்ணிகள்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தாவரங்கள் மரங்களின் மீது வாழ்ந்தாலும் அந்த மரத்துக்கு பெரிய தீங்கையும் இழைப்பது இல்லை. இவை மழை, பனி, காற்று போன்றவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. மரங்களின் சிதைந்த பகுதிகளில் இருந்தும் சத்துகளைப் பெற்றுக்கொண்டு உயிர் வாழ்கின்றன, ஓவியா.