மீன்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? கலர் கலரா, அழகழகான மீன்களை வாங்கி மீன் தொட்டியில் வளர்ப்பீர்கள் அல்லவா? அழகான மீன்கள் எப்படி உலகில் இருக்கின்றனவோ, சில வினோத மீன்களும் ஆழ்கடலில் உள்ளன. அதில் ஒன்றுதான் பிளாப் ஃபிஷ்.மனித முகத்தில் ஒரு மீன் இருந்தால் எப்படியிருக்கும்?
இந்த மீனின் முகமும் அப்படித்தான். மீனின் முகத்தில் கண், நீண்ட மூக்கு, பொக்கை வாய் எல்லாம் மனித முகத்தையே ஞாபகப்படுத்துகின்றன. பார்ப்பதற்குக் கொஞ்சம் அருவருப்பாகவும் இது இருக்கும். அதனாலேயே இதை அசிங்கமான மீன் என்று அழைப்பவர்கள் உண்டு. ஆனால், இது வினோதமான மீன் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த மீனை நம் நாட்டு கடல் பகுதியில் காணவே முடியாது. ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, நியுசிலாந்து நாட்டுக் கடல் பகுதிகளில்தான் காண முடியும். இது ஒரு அடி ஸ்கேல் அளவே இருக்கும். கடலில் மிக ஆழத்தில் அதாவது கிட்டத்தட்ட 600 முதல் 1200 மீட்டர் அடிப்பரப்பிலிலேயே வாழ்கிறது இந்த மீன்.
உணவுக்காக இந்த மீன் இடத்தை விட்டு எங்கேயும் நகர்வதில்லை. இருக்கும் இடத்தைத் தேடி வரும் இரைகளைப் பிடித்து சாப்பிடும் அப்பிராணி மீன். உலகில் உள்ள அரிய மீன் இனங்களின் பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது.