மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: இடது கைப் பழக்கம் நல்லதா?

செய்திப்பிரிவு

பல்லி நம் உணவில் விழுந்தால் விஷம் என்கிறார்கள். அதே பல்லிகளைப் பறவைகள் உண்ணுகின்றனவே, அவற்றுக்கு விஷம் பாதிக்காதா டிங்கு?

–எஸ்.எஸ். முத்து சுப்பிரமணியன், 8-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை.

பெரும்பாலான பல்லிகள் விஷமற்றவை. வீட்டுப் பல்லிகள் நம் உணவில் விழுந்தால் பல்லிக்குதான் ஆபத்தே தவிர, நமக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, முத்து சுப்பிரமணியன். அதேபோலதான் பறவைகள் அதிக அளவில் பல்லிகளை இரையாக்கிக்கொண்டாலும் அவற்றுக்கும் ஆபத்து இல்லை.

8CHSUJ_TINKU5என் தங்கை இடது கையால்தான் சாப்பிடுவாள், எழுதுவாள். ஆரம்பத்தில் மாற்ற முயன்றோம். பிறகு அவள் விருப்பப்படி விட்டுவிட்டோம். இப்போது பள்ளியில் ஆசிரியர்கள் வலது கையால் எழுதும்படிக் கட்டாயப்படுத்துகிறார்கள். இடது கைப் பழக்கம் தவறா டிங்கு?

–பி. ரத்னா, தென்காசி.

இடது கைப் பழக்கம் தவறானது என்ற எண்ணம் நம்மிடம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்தப் பழக்கத்தை மாற்ற நினைக்கிறார்கள். இயற்கையாக யார் யாருக்கு எந்தக் கையால் எழுதவும் வேலை செய்யவும் முடிகிறதோ, அந்தக் கையைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

கைகளில் என்ன பாகுபாடு? ஒருவரின் பழக்கத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றும்போது, அது அந்த நபருக்குத் தீங்காக முடியலாம். அதனால் உங்கள் தங்கையின் இடது கைப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அவளுடைய ஆசிரியர்களிடமும் இடது கைப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறிவிடுங்கள். இடது கைப் பழக்கக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன், மகா அலெக்சாண்டர், பில்கேட்ஸ், பராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் என்று இடது கைப் பழக்கக்காரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதனால் தயக்கம் இன்றி, உங்கள் தங்கையின் இடது கைப் பழக்கதை அங்கீகரியுங்கள், ரத்னா.

இந்தியாவில் நீ பார்த்து வியந்த சுற்றுலாத்தலம் எது? இனி பார்க்க விரும்பும் சுற்றுலாத்தலம் எது டிங்கு?

–எஸ். ராஜகணேஷ், தலைஞாயிறு.

காஷ்மீர்தான் இன்றுவரை வியக்க வைத்துக்கொண்டிருக்கும் சுற்றுலாத்தலம். பனி போர்த்திய மலைகள், பரந்து விரிந்திருக்கும் டால் ஏரி, படகு வீடுகள், ஆப்பிள் மரங்கள், பூந்தோட்டங்கள், ஆறுகள் என்று பார்க்கும் இடமெல்லாம் அவ்வளவு அழகாக இருக்கும்! அங்கு வாழும் மனிதர்கள் மிகவும் அன்பாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். சுவையான தேநீரும் உணவுகளும் கிடைக்கும். காஷ்மீரைப் பார்த்துவிட்டதால், இனி பார்க்க விரும்பும் இடம் என்று எதுவும் இல்லை, ராஜகணேஷ்.

இதுவரை எத்தனை இந்தியர்கள் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள் டிங்கு?

–வே. கனிமொழி, ஆத்தூர்.

ரவீந்திரநாத் தாகூர், சர் சி.வி. ராமன், அன்னை தெரசா, அமர்த்திய சென், கைலாஷ் சத்யாத்ரி என்ற 5 பேரும் இந்தியாவிலேயே வாழ்ந்த நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள். ஹர் கோவிந்த் குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் என்ற 3 பேரும் இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழ்ந்த நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள். ரொனால்ட் ராஸ், ருட்யார்ட் க்ளிப்பிங், தலாய் லாமா, வி.எஸ். நைபால் என்ற 4 பேரும் இந்தியாவில் பிறந்து வெளிநாட்டினராகப் பெற்ற நோபல் பரிசுகள். இப்படிப் பார்த்தால் மொத்தம் 12 நோபல் பரிசுகள் என்று சொல்லலாம், கனிமொழி.

SCROLL FOR NEXT