மு
ன்பொரு காலத்தில் ரோஜாஉடல் என்னும் சிறுமி காபூலில் வசித்துவந்தார். ஆமாம் அவர் பெயரே அதுதான். அவர் அக்காவின் பெயர் என்ன தெரியுமா? ரோஜா முகம். இன்னொரு அக்காவுக்கு ரோஜா கன்னம் என்று பெயர். பிறந்தவுடன் குழந்தையைக் கவனிப்பார்கள். முகம் சிவந்திருந்தால், ரோஜா முகம். கன்னம் சிவந்திருந்தால் ரோஜா கன்னம். இந்த இரண்டு பெயர்களையும் வைத்து முடித்த பிறகு ரோஜா மலர் போலவே ஒரு குழந்தை பிறந்ததால் குல்பதன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். குல் என்றால் ரோஜா, பதன் என்றால் உடல்.
நீ யார் என்று குல்பதனிடம் யாராவது கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார் தெரியுமா? ‘நான் ஒரு சாதாரணமான பெண். என்னைப் பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.’ ஆனால் அது உண்மையல்ல. அவருடைய மூன்று உறவினர்களும் இந்திய வரலாற்றில் முக்கியமானவர்கள். குல்பதனின் அப்பா, பாபர். முகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவியவர். பாபருக்கு ரோஜா பிடிக்கும் என்பதால் தன்னுடைய இளைய மகளுக்கு அவர்தான் குல்பதன் என்று பெயர் வைத்தார். குல்பதனின் சகோதரர், ஹுமாயுன். பாபருக்குப் பிறகு முகலாயப் பேரரசைப் பலப்படுத்தியவர். மூன்றாவது உறவினர், அக்பர். ஹுமாயுனின் மகன். குல்பதன் அவருக்கு அத்தை.
ஒருநாள் அப்பா பாபர், பாய்ந்து சென்று குதிரை மீது ஏறி அமர்ந்ததை, குல்பதன் கண்டார். அப்போது அவர் வயது மூன்று. அம்மாவிடம் அப்பா எங்கே போகிறார் என்று விசாரித்தார். அவர் போருக்குப் போகிறார் குல்பதன், நீ போய் விளையாடு என்று சொன்னார் அம்மா. போர் என்றால் என்னவென்று குல்பதனுக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் அவருக்குப் போர் பிடிக்கவில்லை.
சண்டை போடுவார்கள், மண்டை உடையும் என்பதால் ஏற்பட்ட வெறுப்பு அல்ல அது. போர் என்பது அடிக்கடி வந்துகொண்ட இருக்கிறது. உடனே அப்பா குதிரை மேல் ஏறி போய்விடுவார். வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் அப்பாவைப் பார்க்க முடியவில்லை. என் அப்பாவை என்னிடமிருந்து பிரிக்கும் போரை ஏன் வெறுக்கக்கூடாது?
பாபர் ஒரு சிறந்த போர் வீரர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் குல்பதன் தன் அப்பாவைப் பார்த்துப் பெருமைப்பட்டது வேறொரு விஷயத்துக்காக. பாபருக்கு கவிதை எழுதுவது பிடிக்கும். கடிதங்கள் எழுதவும் பிடிக்கும். ஒருமுறை ஹுமாயுனை அழைத்து ஒரு கடிதம் எழுதச் சொன்னார் பாபர். தன் மகன் எப்படி எழுதுகிறான் என்று அவர் பார்க்க விரும்பினார். ஹுமாயுனும் தன் அப்பாவிடமிருந்து எப்படியாவது பாராட்டு பெற்றுவிடவேண்டும் என்று நினைத்து இரவெல்லாம் கண் விழித்து, மாய்ந்து மாய்ந்து ஒரு பெரிய கடிதம் எழுதினார்.
அதைப் படித்துப் பார்த்த பாபர் உடனே பதில் எழுதினார். அன்புள்ள ஹுமாயுன், உனக்கு நிச்சயம் எழுதவருகிறது. உன் எழுத்தில் ஒரு தவறுகூடக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நல்ல எழுத்து என்பது எளிமையாக இருக்கவேண்டும். உன் எழுத்தில் எளிமை இல்லை. மற்றவர்களைக் கவரவேண்டும் என்பதற்காக நீ பல கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாய். அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெடுகிறாய். சொல்ல வந்ததைச் சொல்லாமல், சுற்றி வளைத்து என்னென்னவோ விவரிக்கிறாய். இதையெல்லாம் நீ தவிர்க்கவேண்டும். நீ என்ன விரும்புகிறாயோ அதை எழுது. அப்போதுதான் நீ எழுதுவதை மற்றவர்களும் விரும்புவார்கள்.
ஆனால் ஹுமாயுன் வளர்ந்து மன்னரான பிறகு எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இந்தியா என்னும் பெரிய நாட்டை ஆட்சி செய்வதென்றால் சும்மாவா? கடிதமோ கவிதையோ எழுத எங்கே நேரம் இருக்கப்போகிறது? ஆனால் ஹுமாயுனுக்குப் புத்தகங்கள் மீது ஆர்வம் இருந்துவந்தது. அக்பரோ, தன்னுடைய அப்பாவை மட்டுமல்ல தாத்தா பாபரையும் மிஞ்சிவிட்டார். ஊர் உலகமெல்லாம் தேடித் தேடி பல ஆயிரம் புத்தகங்களைச் சேகரித்து மகிழ்ந்தார்.
அந்தப் புத்தகங்களைத் தினமும் அவருக்கு யாராவது வாசித்துக் காட்டவேண்டும். அப்படி வாசிப்பவர்களுக்குக் கை நிறையப் பரிசுகள் கொடுத்து அனுப்புவார். எழுதவோ படிக்கவோ தெரியாது என்றாலும் அக்பர் பல நூல்களைக் கற்றுக்கொண்டது இப்படித்தான். தனக்குத் தேவைப்பட்ட புத்தகங்களை எழுத வைத்து வாசிப்பதும் உண்டு.
அப்படித்தான் ஒருநாள் அக்பர் குல்பதனிடம் சென்று பேசினார். என்னுடைய அப்பா ஹுமாயுனைப் பற்றி உங்களால் ஒரு புத்தகம் எழுதித் தர முடியுமா? குல்பதனுக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அரண்மனையில் இருப்பவர்களோ எதிர்த்தார்கள். ஹுமாயுனின் சகோதரியாகவே இருந்தாலும் குல்பதன் ஒரு பெண் அல்லவா? அவரால் எப்படி வரலாறு எழுதமுடியும்?
ஹுமாயுன்நாமா என்னும் முக்கியமான நூலை எழுதி முடித்ததன் மூலம், என்னால் வரலாறு எழுதவும் முடியும் வரலாறு படைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார் குல்பதன். பாபரின் விருப்பத்தை இறுதியில் நிறைவேற்றியவர் அவர்தான். ஆனாலும் குல்பதனுக்கு ஒரு வருத்தம் இருந்திருக்கவேண்டும். எப்படி எழுதவேண்டும் என்று ஹுமாயுனுக்கு மட்டும் ஏன் கற்றுக் கொடுத்தீர்கள் அப்பா? எழுதுவது ஆண்களின் வேலை என்றுதான் நீங்களும் நினைத்தீர்களா?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com