பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன ஆகும், டிங்கு?
- ப. பவதாரணி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
பூமி சுழல்வதை நிறுத்திக்கொண்டால் என்ன ஆகும் என்பதை முழுமையாகச் சொல்ல இயலவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமி சுழல்வதாலேயே இரவு, பகல் ஏற்படுகிறது. இது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. பூமி சுழலாமல் ஒரே இடத்தில் நின்றால், பூமியின் ஒரு பகுதி சூரிய ஒளியைப் பெறும். மற்றொரு பகுதிக்குச் சூரிய ஒளி கிடைக்காது.
இரவே இல்லாமல் பகலாக இருந்தால் வெப்பத்தை உயிரினங்களால் தாங்க இயலாது. உயிரினங்களின் உயிர்க்கடிகாரம் தன் இயல்பை இழக்கும். துருவப் பகுதி உருகிவிடும். இன்னொரு பக்கம் எப்போதும் இருளாகவே இருக்கும். உயிரினங்களால் குளிரைத் தாங்க இயலாது. சூரியன் இன்றி தாவரங்களால் உணவு தயாரிக்க இயலாது. கடல் நீர் உறைந்து போகும். பருவ காலங்கள் ஏற்படாது. பூமி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற கோளாக மாறிவிடலாம் பவதாரணி.
காகம் எங்கள் வீட்டின் மீது அமர்ந்து கத்தினால் விருந்தினர் வருவார்கள் என்கிறார் என் பாட்டி. அவர் சொல்வதுபோல் பலமுறை நடந்திருக்கிறது. இது நிஜமா, டிங்கு?
- சு. குகன், 3-ம் வகுப்பு, அரசு ஆரம்பப் பள்ளி, செங்கல்பட்டு.
விருந்தினர் நம் வீட்டுக்கு வருவது காகத்துக்கு எப்படித் தெரியும்? காகத்திடம் சொல்லிவிட்டா வருகிறார்கள்? நம் வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கும் காகம் கரைவதற்கும் தொடர்பில்லை, குகன். நீங்களே ‘காகம் கரையும்போது பல முறை விருந்தினர் வந்ததாகச்’ சொல்கிறீர்கள்.
அப்படி என்றால், சில முறை காகம் கரைந்தும் விருந்தினர் வரவில்லைதானே? காகம் கரையும் நாளில் விருந்தினர் வருவது தற்செயலான நிகழ்வு. காகம் கரைவதற்கும் விருந்தினர் வருவதற்கும் தொடர்பில்லை, இது வெறும் நம்பிக்கை மட்டுமே.
என் பிறந்தநாள் பரிசாக ஒரு வாட்ச் வாங்கித் தந்தார் அக்கா. அதில் ‘QC PASSED' என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம், டிங்கு?
- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
கைக்கடிகாரம் தரக் கட்டுப்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக, 'QC PASSED' என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது, இனியா.
முயல் ஏன் தன்னுடைய மலத்தை உண்கிறது, டிங்கு?
- கே. இர்ஃபான், 6-ம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, கம்பம்.
முயல்கள் இரு வகையில் மலத்தை வெளியேற்றுகின்றன. அவற்றில் சாப்பிடும் உணவிலிருந்து அனைத்து ஊட்டச்சத்து களையும் பிரித்து எடுக்க இயலாதபோது, உணவு மென்மையாக்கப்பட்டு மலமாக வெளியேற்றப்படுகிறது.
இதில் புரதமும் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், மீண்டும் முயல்களால் உண்ணப்படுகிறது. இது பெரும்பாலும் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் வெளியேற்றப்பட்டு, உண்ணப்படுகிறது, ஆனால் எல்லா முயல் வகைகளும் இப்படிச் செய்வதில்லை, இர்ஃபான்.