சா
கசப் பயணம் செய்ய விரும்பினால் செம்பரா மலைக்குதான் செல்லவேண்டும். கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது இந்த மலை. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தச் செம்பரா மலை, வயநாடு மாவட்டத்திலேயே மிக உயரமான மலை உச்சியாகக் கருதப்படுகிறது.
மலை உச்சியிலிருந்து பார்க்கும்போது பசுமை நிறைந்த வயநாடு மலைகளும் நீலகிரி மலைகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன! மலை அடிவாரத்தில் தேயிலைத் தோட்டங்களும் மலையின் வலப் பக்கத்தில் பசுமையான பள்ளத்தாக்கும் உள்ளன. கல்பேட்டா நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் செம்பரா மலை. காடுகளுக்குள்ளும் மிகப் பெரிய பாறைகளைக் கடந்தும் செல்லவேண்டும்.
செம்பரா மலை உச்சியை அடைவதற்கு 3 மணி நேரம் ஆகும். மலை ஏறுவதற்கு அருகில் உள்ள மேப்படி நகரில் உள்ள வனத்துறையிடம் அனுமதி பெற்று, நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. மலையேற்றத்துக்கு வழிகாட்டிகள் இருக்கின்றனர். அவர்களுடைய உதவி இல்லாமல் செம்பரா மலை ஏறுவது சற்றுச் சிரமமாக இருக்கும்.
மலை ஏறுவதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. சமவெளியில் தேயிலைத் தோட்டங்கள் வழியே பயணிக்க வேண்டும். இது கொஞ்சம் எளிதான வழி. அடுத்து காய்ந்த இலைகள், கிளைகளுக்கிடையே சற்றுச் சாய்வாக உள்ள மலைப் பகுதியில் ஏற வேண்டும். வழுக்குப் பாறைகளும் மாவு போன்ற மண்ணும் இருப்பதால் மிகவும் கவனமாக ஏற வேண்டும். கால்களை அழுத்தமாக நிலத்தில் பதித்தும், அருகில் இருக்கும் செடிகளின் கிளைகளைப் பிடித்துக் கொண்டும் செல்ல வேண்டும்.
அடுத்த கட்டத்தில் உயர்ந்த மரங்களுடன் கூடிய வனப்பிரதேசம். இங்கு மலை செங்குத்தாக இருப்பதால் ஏறுவது மிகவும் சிரமாக இருக்கும். இங்கும் பாறைகள் வழுக்கும் விதத்திலேயே உள்ளன. மேலே செல்லச் செல்ல பசுமை போர்வை போர்த்திய இடங்கள் கண்களைக் கவர்கின்றன. பெரிய பாறைகளைத் தாண்டிச் சென்றால் ’இதய’ வடிவில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. இதை ’இதயத் தடாகம்’ என்று அழைக்கிறார்கள். பச்சை மலைக்கு நடுவில் நீல வண்ண ஏரியைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
ஏரிக்கு மேல் ஏறுவதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. வனவிலங்குகளின் அபாயம் இருப்பதால் முகாம் அமைத்து தங்குவதற்கும் அனுமதியில்லை. சுற்றிப் பார்த்து விட்டு, இரண்டரை மணி நேரத்தில் கீழே இறங்கிவிடலாம்.
கேரளா சுற்றுலாத்துறை சாலைகளோ, படிக்கட்டுகளோ அமைக்காமல் இயற்கையை அப்படியே பாதுகாக்கிறது. மலை ஏற்றம் சிரமமாக இருந்தாலும் சாகச அனுபவத்தைத் தருகிறது. இந்த மலையில் அபூர்வமான மரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன.
இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வனத்துறையும் சுற்றுலாத்துறையும் மிக நன்றாக மலையைப் பராமரிக்கின்றனர். செப்டம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம்வரை இங்கு மலை ஏறுவதற்கு தகுந்த காலம். மழைக் காலங்களில் ஏற முடியாது.
தொடர்புக்கு: mangai.teach@gmail.com