மாயா பஜார்

ருட்யார்ட் கிப்ளிங் கதை: சிறுத்தையின் உடலில் புள்ளிகள் தோன்றியது எப்படி?

ஜனனி ரமேஷ்

ணலும் பளபளக்கும் பாறைகளும் நிறைந்த ஹை வெல்ட் என்ற பகுதியில் சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, குதிரை என்று பல விலங்குகள் வாழ்ந்துகொண்டிருந்தன. அப்போது சிறுத்தையின் உடலில் புள்ளிகள் கிடையாது. அதன் மஞ்சள் நிறம் மணல் பரப்பு, பாறை, மரத்தின் காய்ந்த கோரைப் புற்கள், சருகுகளின் வண்ணத்துடன் ஒத்துப் போனது. அதனால் மற்ற விலங்குகளுக்குச் சிறுத்தையை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகே செல்லும் விலங்குகள் மிக எளிதாக அதனிடம் சிக்கி இரையாயின. ஓர் எத்தியோப்பிய வேடரும் சிறுத்தையுடன் சேர்ந்துகொண்டு வேட்டையாடிக் கொண்டிருந்தார்.

சிறுத்தையிடம் தானாகவே சென்று மாட்டிக்கொண்டு உயிரை விட்ட விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. சிறுத்தையோடு சண்டை போட்டு ஜெயிப்பது நடக்காத செயல். குறைந்தபட்சம் சிறுத்தை இருப்பதைத் தெரிந்து கொண்டு அதை நெருங்காமல் இருந்தால்தான் மிச்சம் மீதி உயிர்களையாவது காப்பாற்றமுடியும். உடனே அங்கிருந்து வெளியேறின.

நீண்ட பயணத்துக்குப் பிறகு, மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியை அடைந்தன. காட்டுக்குள் சூரியனின் வெப்பம் தெரியாத வகையில் மரங்கள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தன. பாதி வெயில், பாதி நிழல் என்ற வகையில் இலைகளின் வழியே மட்டும் அவ்வப்போது சூரியன் எட்டிப் பார்க்கும். இந்த இடம் விலங்குகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

கழுத்தை வளைக்க வேண்டிய அவசியமின்றி ஒட்டகச்சிவிங்கி உயர்ந்த மரத்தின் இலைகளை ஒய்யாரமாக சுவைத்துக்கொண்டிருந்தது. சிறுத்தைக்குப் பயப்படாமல் அங்கும் இங்கும் குதித்து விளையாடியது குதிரை. குரங்குகளின் சந்தோஷம் சொல்லி மாளாது.

மரத்துக்கு மரம் தாவி விளையாடவும், கிளைகளில் வாலைச் சுருட்டித் தொங்கவும் ஏராளமான மரங்கள். கரடிக் குட்டியைப் பற்றிச் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு மரத்தின் மீதும் ஏறி இறங்குவதுதான் அதன் ஒரே பொழுதுபோக்கு. பச்சைப் பாம்புகள் இலைகளுக்குள்ளும், பழுப்பு நிறப் பாம்புகள் மரக் கிளைகளிலும் இருக்கும் இடம் தெரியாமல் அவற்றின் நிறத்துடன் தங்களை இணைத்துப் பதுங்கிக்கொண்டன.

காட்டில் வசித்த விலங்குகள் மீது சூரிய ஒளியும் நிழலும் சரி பாதியாக விழுந்தன. இதன் காரணமாக குதிரைகள் உடல் மீது சூரிய ஒளி பட்ட இடங்கள் வெள்ளையாகவும், நிழல் விழுந்த இடங்கள் கறுப்பாகவும் மாறின. அதனால் ‘வரிக்’ குதிரைகள் என்றே அழைக்கப்படலாயின. ஒட்டகச்சிங்கியின் உடலிலும் இதே மாற்றம் ஏற்பட்டது. உயரமான மிருகம் அல்லவா? அதனால் உடலில் அங்குமிங்குமாக நிழல் பட்ட பகுதிகளில் மட்டும் திட்டுத் திட்டாகக் கரும்புள்ளிகள் தோன்றின. உயரமான மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டால் கண்டுபிடிக்கவே முடியாத வகையில் தோல் பழுப்பு நிறமானது. அதன் வாசனை மற்றும் குரலை வைத்துதான் இன்னார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறாக பாதுகாப்புக்கும் தனித் தன்மைக்கும் இந்த அடையாளங்கள் விலங்குகளுக்கு உதவின.

விலங்குகள் ஹை வெல்ட் பகுதியை விட்டுச் சென்றவுடன் சிறுத்தையும் வேட்டைக்காரரும் உணவுக்குத் திண்டாடினர். குரங்கிடம் ஆலோசனை கேட்க, அது காட்டுக்கு வழிகாட்டி அனுப்பி வைத்தது.

இருவரும் காட்டுக்குள் சென்றபோது ரம்மியமான இயற்கைக் காட்சிகளைக் கண்டு அதிசயித்தனர். அப்போது ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை வாசனையை நுகர்ந்தனர். குரலைக் கேட்டனர். ஆனால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. அந்த ரகசியத்தைச் சொல்லும்படி ஒரு வரிக்குதிரையிடம் இருவரும் கேட்டனர். காரணத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் மறைந்துகொண்டது அந்த வரிக்குதிரை.

வேட்டைக்காரர் வெயிலில் நின்று தனது உடலைக் கறுப்பாக்கிக்கொண்டார். சிறுத்தைக்குத் தனது உடலை வரிக்குதிரைபோல் வரியாகவோ, ஒட்டகச்சிவிங்கிபோல் திட்டுகளாகவோ வைத்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. உடல் முழுவதும் சீரான பூப்போன்ற வடிவம் வேண்டுமென்று விரும்பியது. வேட்டைக்காரர் கை விரல்களைத் தனது உடலின் மீது வைத்து அழுத்த, கறுப்பு வண்ணம் விரல்களில் ஒட்டிக்கொண்டது.

அதை அப்படியே சிறுத்தையின் உடல் மீது வைத்து அழுத்தினார். இப்படியாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கைவிரல்களை வைத்து அழுத்த, சிறுத்தையின் உடல் முழுவதும் அழகான வடிவங்களால் நிரம்பியது. இதற்கு முன்புவரை புலியும் சிறுத்தையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. இந்த நிகழ்வுக்குப் பிறகே சிறுத்தைகள் தனித்து தெரிந்தன.

SCROLL FOR NEXT