எங்கள் பக்கத்து வீட்டில் ஒருநாள் ஆமை நுழைந்துவிட்டது. அவர்கள் உடனே வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். ஏதாவது காரணம் தெரியுமா, டிங்கு?
– ப்ராங்க் ஜோயல், 4-ம் வகுப்பு, ஜெயின் வித்யாலயா, மதுரை.
‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று சொல்வார்கள். அதனால் ஆமையை ஒரு கெட்ட சகுனமாக நினைத்து, வீட்டைக் காலி செய்திருப்பார்கள். இந்தக் காலத்தைப்போல் அந்தக் காலத்தில் வீடுகளை எப்போதும் பூட்டி வைத்திருக்க மாட்டார்கள். மெதுவாக நடந்து செல்லும் ஆமை வீட்டுக்குள் நுழைவதுகூடத் தெரியாமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர்கள்கூட நுழைந்துவிடலாம் அல்லவா! அதனால் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆமை ஒரு சாதுவான பிராணி. தற்போது பலரும் வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்த்துவருகிறார்கள். ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை என்பதால் சீனர்களும் அமெரிக்கப் பூர்வகுடி மக்களும் ஆமையை ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடையாளமாக நினைக்கிறார்கள், ப்ராங்க் ஜோயல்!
ஜிம்மும் டெல்லாவும் இடம்பெற்றுள்ள ’கிறிஸ்துமஸ் பரிசு’ என்ற கதையை நீ படித்திருக்கிறாயா டிங்கு? எனக்கு மிகவும் பிடித்த கதை. பல முறை படித்திருக்கிறேன்.
– எம். இன்பா ஜாக்குலின், ஈரோடு.
ஜிம், டெல்லா என்ற பெயர்களைக் கேட்டவுடன் கண்டுபிடித்துவிட்டேன், இன்பா. ஓ. ஹென்றி எழுதிய சிறுகதைகள் அனைத்தும் பிரமாதமாக இருக்கும். அதில் நீங்கள் சொல்லும் கிறிஸ்துமஸ் பரிசு (The Gift of the Magi) என்ற கதையும் உங்களைப் போலவே எனக்கும் மிகவும் பிடித்த கதை. ஏழைத் தம்பதி கிறிஸ்துமஸுக்கு ஒருவருக்கு இன்னொருவர் பரிசு கொடுக்க நினைக்கிறார்கள். கையில் பணமில்லை. டெல்லா தன் நீண்ட கூந்தலை விற்று, கணவர் ஜிம்முக்கு ஒரு கடிகாரப் பட்டை வாங்குவார்.
ஜிம் தன் மனைவி டெல்லாவுக்காகக் கடிகாரத்தை விற்று, அழகிய சீப்பு ஒன்றை வாங்குவார். இருவர் வாங்கியப் பரிசுகளால் பயன் இல்லாமல் போனாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை அழகாகக் காட்டியிருப்பார் ஓ. ஹென்றி. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இந்தக் கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாடப் புத்தகங்களில்கூட இடம்பிடித்திருக்கிறது. சிறந்த படைப்புகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் என்பதற்கு இந்தக் கதையும் உதாரணம்.
ஆந்தைக்குப் பகலில் ஏன் கண் தெரிவதில்லை, டிங்கு?
- ஆர். குமார், என்.எஸ்.கே.பி.ஜி. மேல்நிலைப் பள்ளி, கூடலூர்.
பகலில் இரை தேடும் உயிரினங்கள், இரவில் இரை தேடும் உயிரினங்கள் இருக்கின்றன. ஆந்தை இரவில் இரை தேடக்கூடியது. அதனால் இரவில் பார்வை நன்றாகத் தெரியும்படி இயற்கை தகவமைப்பை வழங்கியிருக்கிறது. ஆந்தையின் விழித்திரையில் குச்சி செல்கள் (rods) அதிகமாக இருக்கின்றன. இவை மங்கிய வெளிச்சத்திலும் செயல்படக்கூடியவை.
அதனால் ஆந்தையால் இரவிலும் நன்றாகப் பார்க்கமுடியும். இரை எங்கே இருக்கிறது என்பதைக் காணமுடியும். பகலில் பிரகாசமான ஒளிக்கதிர்களைப் பெறக் கூடிய வகையில் கூம்பு (cones) செல்கள் மிகவும் குறைவாக இருப்பதால் ஆந்தைக்குப் பகலில் பார்வை நன்றாகத் தெரிவதில்லை, குமார்.