சிறார் எழுத்தாளர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் விருது பால சாகித்ய விருது. இந்த விருதை இந்த ஆண்டு பெற்றிருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர். குழந்தைகளுக்காக நேரடி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ நூல்தான் பால சாகித்ய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் மூதாதையர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகே வாழ்ந்த இடம் அது. அங்கே அகழாய்வு நடத்தி அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவரத்தையும் கீழடியில் வாழ்ந்த மக்கள் எங்கேயிருந்து வந்தார்கள் என்கிற வரலாற்றையும் ஆதன் எனும் பண்டைக்காலச் சிறுவன் வழியாகத் தெரிந்துகொள்கிறான் கேப்டன் பாலு. பாலுவோடு சேர்ந்து நாமும் வரலாற்றை சுவாரசியமாகத் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.
ஆதனின் பொம்மை, உதயசங்கர், வெளியீடு: வானம், தொடர்புக்கு: 91765 49991
- நேயா