மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பு பால் குடிக்குமா?

செய்திப்பிரிவு

பாம்பு பால் குடிக்காது என்று என் நண்பர் சொல்கிறார், உண்மையா டிங்கு?

– பாரதி சுந்தர், குறண்டி.

உங்கள் நண்பர் சொல்வது உண்மைதான், பாரதி சுந்தர். பாலை உற்பத்திச் செய்யக்கூடிய பாலூட்டிகளே பால் குடிக்கக்கூடியவை. பாம்பு ஊர்வனப் பிராணி இனத்தைச் சேர்ந்தது. அதனால் பாம்புக்கும் பாலுக்கும் தொடர்பே இல்லை. உடலில் அளவுக்கு அதிகமான நீரிழப்பு ஏற்படும்போது பாம்பு, எந்தத் திரவம் கிடைத்தாலும் குடிக்கும். அதாவது தண்ணீரோ, பாலோ எது கிடைத்தாலும் குடிக்கும். மாடுகளின் மடியிலிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. அதேபோல புற்றுக்குள் ஊற்றும் பாலை வாயைத் திறந்து மடக் மடக் என்றெல்லாம் பாம்பு குடிக்காது. அந்தப் பால் புற்றைத்தான் ஈரமாக்கும். அதேபோல் புற்றுக்குள் முட்டைகளை உடைத்து ஊற்றினாலும் சாப்பிடாது. பாம்புகள் எதையும் முழுதாக விழுங்கக்கூடியவை.

உனக்கு வாசிப்பில் ஆர்வம் உண்டா டிங்கு? சமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம் எது?

– ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டீர்கள், ராஜசிம்மன்! வாசித்தால்தானே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கமுடியும். கதைகள், நாவல்களைவிட வாழ்க்கை, வரலாறு, அறிவியல், அரசியல் போன்றவற்றை விரும்பிப் படிப்பேன். சமீபத்தில் ராகுல்ஜி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை இரண்டாவது தடவையாகப் படித்து முடித்தேன்.

எறும்புகள் ஏன் எப்போதும் வரிசையாகச் செல்கின்றன டிங்கு?

ப்ரான்க் ஜோயல், ஜெயின் வித்யாலயா, மதுரை.

எறும்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கே பெரமோன் என்ற ரசாயனப் பொருளைச் சுரக்கின்றன. ஏதாவது ஆபத்து என்றால் மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பெரமோனைச் சுரக்கும். ஓரிடத்தில் உணவைக் கண்டுபிடித்தால் பெரமோனைச் சுரக்கும். இதனால் மற்ற எறும்புகள் வாசத்தை வைத்து தலைமை எறும்பைப் பின்தொடர்ந்து சென்று, உணவைப் புற்றுக்கு வரிசையாக எடுத்துவருகின்றன. உணவு காலியாகிவிட்டால் பெரமோன் சுரப்பதை நிறுத்திவிடுகின்றன.

SCROLL FOR NEXT