முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் என்பது தமிழகத்தின் மிகப் பெரும் திருவிழா. இன்றோ அடுத்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு என்கிற அளவில் சுருங்கிவிட்டது.
அன்று விவரம் புரியாமல் ‘போடுங்கம்மா ஓட்டு...’ எனக் கூட்டமாக ஆதரவு கோஷம் எழுப்பிய சிறுவர்கள் தொடங்கி, தங்கள் அபிமானத் தலைவரின் அரசியல் பார்வையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராயும் பெரியவர்கள்வரை தேர்தலில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.
கட்சிச் சின்னங்களைத் தெருக்களில் வரைவது முதல் கொடிகள், கொடித்தோரணங்களைக் கட்டுவதுவரை இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுபோன்ற வேலைகளை இளைஞர்கள் செய்த காலம் அது. ஆனால், இந்தக் காட்சிகள் இன்றைக்குப் பழங்கதைகளாகிவிட்டன. இளைஞர்களின் தேர்தல் பார்வையும் மாறிவிட்டது.
அந்தக் காலத் தேர்தல்
இப்போது இருப்பதுபோல் தேர்தல் கட்டுப்பாடுகள் அன்றைக்குக் கிடையாது. சுவர்களில் கட்சிச் சின்னங்களை வரையவோ தோரணங்களைக் கட்டவோ எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
தெரு முழுவதும் சுவர்களில் வரைந்து, கட்சிகளுக்கு வாக்குக் கேட்டு வீதிவீதியாக வலம்வருவார்கள், அந்தக் காலத்து இளைஞர்கள். நாள்தோறும் கட்சிக் கொடிகளை ஏந்தி வாக்குக் கேட்டு வந்துசெல்வார்கள். ஒரு தெருவில் ஒரு கட்சியின் கோஷம் கேட்டால், இன்னொரு தெருவில் இன்னொரு கட்சியின் கோஷம் கேட்கும்.
நண்பர்களாக இருந்தாலும் வெவ்வேறு கட்சியின் ஆதரவாளர்களாக இணக்கமாக இருந்த காலம் அது. ஆனால், இந்தத் தலைமுறையினருக்கு இதுபோன்ற தேர்தல் கால அனுபவங்கள் வாய்க்கவில்லை.
அன்றைக்குக் குடும்பத் தலைவர் எந்தக் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறாரோ, மொத்தக் குடும்பமும் அதே கட்சியின் அபிமானிகளாக இருக்கும். இன்றைக்கு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அரசியல் பார்வை சாத்தியமாகி இருக்கிறது.
மாறிய காட்சி
குறிப்பாக 18 வயதைக் கடந்த முதல் முறை வாக்காளர்கள் கட்சி சார்ந்து பெரும்பாலும் இன்றைக்கு இயங்குவதில்லை. நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
கட்சிகளுக்காகக் கொடிபிடிக்கும் அரசியல் இவர்களிடம் இல்லை. அரசியல் சார்ந்த விஷயங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கருத்துகளையும் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சுயமாகவே முடிவெடுக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்கள், வானொலி; 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை அறிந்துகொண்டவர்கள், இன்றைக்குச் சமூக ஊடகங்களின் மூலமே அரசியல் சங்கதிகளை அறிந்துகொள்கிறார்கள்.
அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கண்களை மூடிக்கொண்டு இன்றைய இளைஞர்கள் ஆதரிப்பதில்லை. கட்சி அபிமானம் கடந்து தலைவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்.
தலைவர்களின் பேச்சுகளில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்கிறார்கள். கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களை இஷ்டப்படி கலாய்க்கிறார்கள். புதியவர்களுக்கு வாக்களிப்பது குறித்துச் சிந்திக்கிறார்கள்.
சமூக ஊடக ஆதிக்கம்
இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படி வாக்களிப்பார்கள், யாருக்கு வாக்களிப்பார்கள், அவர்களை எப்படி வளைப்பது எனத் தெரியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடுகின்றன. அதன் காரணமாகவே இளைஞர்கள் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களின் வாயிலாக இளைஞர்களைக் கவர கட்சிகள் முயல்கின்றன.
சமூக ஊடகங்கள் மூலமாகப் பிரச்சாரம் மேற்கொள்ள கட்சிகள் போட்டிப்போடுகின்றன. தொண்டரணி, மகளிரணி, விவசாய அணி என இருப்பதுபோல எல்லாக் கட்சிகளிலும் இன்றைக்குத் தகவல் தொழில்நுட்ப அணியும் (ஐ.டி. அணி), சமூக ஊடங்களில் தகவல்களைப் பரப்பவே வார் ரூம்கள் போன்றவை வந்துவிட்டன.
இளைஞர்கள் தெரிவிக்கும் கருத்துகள், எந்த விஷயங்களை இளைஞர்கள் விவாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாகவே கட்சியினர் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்பை வைத்துத் தலைவர்கள் கருத்து சொல்லும் அளவுக்கும், எந்தச் செய்தியையும் முதலில் சமூக ஊடங்களில் கட்சிகள் பகிரும் அளவுக்கும் இளைஞர்களின் செயல்பாடு இதில் நிறைந்திருக்கிறது.
இளைய சமூகத்தினரிடம் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தைக் கொண்டுசெல்ல காணொளிக் காட்சிகள், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களே சிறந்த வழி எனக் கட்சிகள் நினைக்கின்றன.
அதிலும் ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் கட்சித் தலைவர்கள் திறன்பேசிகளை வந்தடைகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தைத் தலைவர்கள் சமூக ஊடகக் கணக்கு மூலம் நேரலை செய்கிறார்கள்.
அதேநேரம், இளைஞர்களைக் கட்டிப்போட்டுள்ள சமூக வலைத்தளங்கள் அரசியல்ரீதியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தேர்தல் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் இன்று வேகமெடுத்திருக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது. தேர்தல் முடிவுகளில் அது எப்படிப்பட்ட தாக்கத்தைச் செலுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.