இளமை புதுமை

உயிர் காக்கும் நீச்சல் கலை: ஒரே நாளில் கற்றுக்கொள்வது எப்படி?

ராகா

தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல்,முறையாக நீச்சல் பயிற்சியும் பெறாமல் நீர்நிலைகளில் தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நடக்கிறது. சிறு வயதினர் முதல் பெரியோர் வரை நீச்சல் தெரியாமல் தண்ணீரில் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. அந்தக் காலத்தில் கிணறு, குளங்கள் நிறைய இருந்ததால் பெரும்பாலான குழந்தைகளுக்கு நீச்சல் தெரிந்திருந்தது. இந்தக் காலத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளக் கட்டணம் செலுத்தி நீச்சல் தொட்டியில் பயிற்சிபெற வேண்டிய நிலை இருப்பதால் நீச்சல் தெரியாத பலர் இயற்கைப் பேரிடரின்போதோ ஆபத்தின்போதோ சுதாரித்துக் கொள்ள முடியாமல் உயிரிழக்கின்றனர்.

ஒரே நாளில் நீச்சல் பயிற்சி

இந்நிலையில் நீச்சல் கற்றுக்கொள்வது உயிர் காக்கும் கலை என்கிறார் சென்னை மேற்குத் தாம்பரத்தில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மோ.கணேசன். 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறை அனுபவம் பெற்றவர். இதுவரை 12 புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் கரோனாவால் இவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால் 2020ஆம் ஆண்டிலிருந்து ‘வாலு டிவி’ என்கிற யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார். பொது அறிவு, நாட்டு நடப்பு, புத்தக விமர்சனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை வாலு டிவியில் வழங்கி வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தபோது வீட்டில் முடங்கி இருந்த தனது இரண்டு மகன்களுக்கும், கிழக்குத் தாம்பரம், சேலையூர் பகுதியை அடுத்துள்ள திருவஞ்சேரியில் நீச்சல் பயிற்சியை வழங்கியிருக்கிறார் மோ.கணேசன். நீச்சல் குளத்தில் அவர் பயிற்சியளிக்கவில்லை. கிணற்றில்தான் நீச்சல் பயிற்சி அளித்தார். திருவஞ்சேரியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்ட அவரது மகன்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இவரிடம் நீச்சல் கற்றுக்கொண்டுள்ளனர். இதை மையமாக வைத்து, வாலு என்ற பெயரில் ’ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?’என்கிற கோணத்தில் இவர் வெளியிட்ட காணொளிகள் யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஏராளமானோர் தனக்கும் நீச்சல் பயிற்சி தருமாறு கேட்டுக்கொள்ள வாரந்தோறும் நீச்சல் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.

இது குறித்து விரிவாகப் பேசிய அவர், “வாலு டிவி என்றாலே ஒரே நாளில் நீச்சல் பயிற்சி நிகழ்ச்சிதான் ஹிட் அடித்திருக்கிறது. வாரம் ஒரு வகுப்பு என இதுவரை 50 வகுப்புகளை நிறைவு செய்திருக்கிறோம். இந்த ஒரே நாளில் நீச்சல் பயிற்சி முறையில் இதுவரை என்னிடம் 70க்கும் மேற்பட்டவர்கள் நீச்சல் பயின்று சென்றுள்ளனர். அதில் 5 வயது சிறுவன் சிறுமி முதல், 50 வயது ஆண், 54 வயது பெண் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொடக்கத்தில் இலவசமாக நீச்சல் வகுப்புகளை எடுத்து வந்தபோது 20 முதல் 25 பேர் கற்றுச் சென்றனர். அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்டவர்களும் உண்டு ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்தும் நீச்சல் கற்றுக்கொள்ளாமல் சென்றவர்களும் உண்டு. ஒரு கட்டத்தில் இலவசப் பயிற்சியைச் சிலர் விளையாட்டாக எடுத்துக்கொண்டனர். இதனால் நேரமும் வீணானது. இதைத் தவிர்க்கச் சாதாரண கட்டண அடிப்படையில் நீச்சல் பயிற்சியை வழங்கி வருகிறேன். முக்கியமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நீச்சல் பயிற்சி இலவசம். எந்த வயதினரும் வந்து நீச்சல் பயிற்சி எடுக்கலாம். தன்னம்பிக்கையுடன் முறையாகப் பயிற்சி பெறுபவர்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி உங்களால் கிழக்குத் தாம்பரத்திற்கு வந்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் உங்கள் பகுதியில் தண்ணீர் வசதியுடன் கிணறு இருக்கிறது என்றால், 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்றால், அங்கேயே வந்து நீச்சல் கற்றுத்தரத் தயாராக இருக்கிறேன். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 1000 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்பது எனது இலக்கு” என்கிறார் இந்த வாலு என்கிற மோ.கணேசன்.

நீச்சல் பயிற்சிக்குப் பதிவு செய்வது எப்படி?

96000 45295 என்கிற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொண்டு பயிற்சிக்கான தேதியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

யூடியூப் அலைவரிசையைக் காண: http://youtube.com/vaalutv என்கிற இணைப்பைப் பார்வையிடவும்

SCROLL FOR NEXT