கோ
டை விடுமுறையில் வேதாரண்யம் அருகேயுள்ள கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றுவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தார்ச்சாலையும் அல்லாமல் ஒத்தையடிப் பாதையும் இல்லாமல் சற்றே அகலமான மணல் நிறைந்த பாதை வழியே சிரமப்பட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு, அப்படி ஒரு நாள் சென்றுகொண்டிருந்தேன். ஒரு மாலை நேரத்தில் 50, 60 கறுப்பு ஆடுகள் சென்றுகொண்டிருந்தன. எனக்கு முன்னே இடது பக்கம் பிரிந்து ஒரு மணல் பாதையில் ஆடுகளைத் திருப்பி ஒட்டிக்கொண்டிருந்தார் ஆடு மேய்ப்பவர்.
அந்த மணல் பாதையை நெருங்கி கவனித்தபோதுதான் அந்த அற்புதக் காட்சியை உணர்ந்தேன். ஆடுகள் சீராக ஓட, அதன் பின்னே ஆடு மேய்ப்பவர் நடக்க, மாலை மஞ்சள் வெயில் ஆடுகளின் மீதும் இடையன் மீதும் வெளிச்சக் கீற்றுகளைப் பாய்ச்ச, காலடியில் மஞ்சள் மணல், ஒரு நீர்வண்ண ஓவியம் உயிர்பெற்று வந்ததுபோலக் காட்சியளித்தது.
வண்டியை நிறுத்திவிட்டு கேமராவை வெளியில் எடுத்து படம் எடுப்பதற்கு முன் அந்த மந்தை ஒளியில்லாத பகுதிக்கு நகர்ந்துகொண்டிருந்தது. அதை வெறித்தபடி ஏமாற்றத்துடன் நின்றேன்.
அடுத்த நாள் அதே இடத்தில் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே சென்று காத்திருந்தேன். ஆடுகள் வரவில்லை. இப்படியாக மூன்று நாட்கள் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. நான்காவது நாளைத் தவறவிட்டால் படமெடுக்காமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுற்றும்முற்றும் பார்த்தேன். அருகிலிருந்த குடிசை வீட்டின் பின்புறத்தில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து ஒளி விழுந்த திசையிலிருந்து ஓடிவரச் சொன்னேன். மகிழ்ச்சி பொங்க ஓடி வந்தார்கள்.
இங்கே இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் இப்படி வழிநடத்தி ஃபிலிம் கேமராவில் பதிவு செய்த படங்களே.
இங்குள்ள படங்கள் யதார்த்த ஒளிப்படங்கள்போலத் தோன்றினாலும், அந்தப் பாணியிலாலான ஒளிப்படங்கள் அல்ல. அதேநேரம் அவர்களை இயல்பாக படம் எடுப்பது சவால் நிறைந்தது.
கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com