“உலகத்தில் எல்லா உயிரும் அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யலாம். இதற்கு அடிப்படை, சாதி, மதம், இனம் முதலிய வித்தியாசங்கள் இல்லாமல், உடலில் பிறப்பிலேயே இருக்கும் மாற்றங்களை மறந்து அனைவரையும் சக மனிதராக ஏற்றுக்கொள்வதுதான்!” என்று அழுத்தமாகப் பேசுகிறார் கோபி சங்கர்.
பிறக்கும் போதே ஆண் இனப்பெருக்க உறுப்போ அல்லது பெண் இனப்பெருக்க உறுப்போ முழுமையாக வளர்ச்சியடையாமல் இருபாலின இனப்பெருக்க உறுப்புகள் ஒருங்கே அமைந்த குழந்தைகளை ‘இடையிலிங்கம்’ (இன்டர் செக்ஸ்) என்றழைக்கிறார்கள். இந்தக் குறைபாட்டால், சமூகத்தில் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் புறக்கணிப்புகளும் அதிகம்.
இவர்களின் மேம்பாட்டிற்காக மதுரையில் ‘சிருஷ்டி’ என்னும் மாணவர் குழுமம் மூலமாகப் பணியாற்றிவருகிறார் கோபி. அந்தப் பணிகளுக்காக, சமீபத்தில் ஆசியக் கண்டத்தின் சார்பில் காமன்வெல்த் விருதுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பேசப்படாத பிரச்சினை
இயற்கை, மனிதம், சமூகம் ஆகியவற்றின் அவசியத்தைக் குழந்தைகளிடையே பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர் குழுமம்தான் சிருஷ்டி.
“தங்களின் உடலைப் பற்றிய தெளிவைக் குழந்தைகளுக்கு அளிப்பது, சக உயிர்களை மதிப்பது போன்ற விஷயங்களைப் பள்ளிகள் தோறும் சென்று சொல்கிறோம். ஏறக்குறைய 30 ஆயிரம் குழந்தைகளை இப்படிப் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இதற்காகச் சந்தித்திருக்கிறோம். வற்புறுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்றவற்றை வன்மையாகக் கண்டித்திருக்கிறோம்” என்கிறார் கோபி.
உலகில் மூன்று பால்நிலைகளில்தான் மனிதப் பிறப்பு நிகழ்கிறது. அவை ஆண், பெண், இரு பால் உறுப்புகளுடன் பிறக்கும் இடையிலிங்கம். உலக மக்கள் தொகையில் 1.6 சதவீதம் இடையிலிங்கத்தவர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இப்படி இந்தியாவில் இடையிலிங்கமாகப் பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.
“இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தோம். அதை விசாரித்த ஆணையம், இடையிலிங்கக் குழந்தைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்னும் அறிக்கையை எங்களிடம் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதை இடையிலிங்கக் குழந்தைகளின் பிரச்சினையில் முக்கிய நகர்வாக நினைக்கிறேன்” என்றார்.
அவசர உதவி எண்
இடையிலிங்கத்தவர்கள், அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அறுவை சிகிச்சை செய்வதைத் தடுக்க வேண்டும்.
“இவர்களுக்கு உதவும் வகையில் ஐந்து (தமிழ், தெலுங்கு, கொங்கனி, துளு, இந்தி) இந்திய மொழிகளில், ஏழு நாட்களும் 24 மணி நேரமும் எங்களைத் தொடர்புகொள்ளும் (90922 82369) வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறோம்.
இதைத் தவிர, யூ.ஜி.சி.யின் வழிநடத்தலின்படி விளையாட்டை, சமூக மாற்றத்துக்கான தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். ஏறக்குறைய 32 (தந்தை அல்லது தாய் ஒருவர் மட்டுமே இருக்கும்) ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் முறையான பயிற்சிகளை ‘சிக்ஸ்த் சென்ஸ்’ என்னும் அமைப்பின் மூலமாக வழங்கி வருகிறோம்” என்கிறார் கோபிசங்கர்.
வாழ்த்துகள் கோபி!