இளமை புதுமை

அபிநயம் பிடிக்கும் ரக்பி..!

வா.ரவிக்குமார்

‘‘சலங்கை கட்டிய பாதங்கள் உதைக்கவும் செய்யும்!’’

‘ஸ்வேதா… சிறு குறிப்பு வரைக?’ என்று கேள்வி கேட்டால் இப்படித்தான் ஸ்வேதா நமக்குப் பதில் சொல்வார் போல. ஒரு பக்கம் பரதம்… இன்னொரு பக்கம் ரக்பி… என இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான ‘ரோல்மாடல்’ ஆக ஏற்க, இளமையும் புதுமையும் சரிவிகிதத்தில் கலந்த தகுதியான யுவதி. அவருடன் ஒரு ‘காபி டைம்’ சந்திப்பிலிருந்து…

ரக்பி..?

செவ்வக வடிவத்தில் மைதானம். முட்டை வடிவிலான (Oval) பந்தோடு அணிக்கு 15 பேர் மைதானத்தில் பொறி பறக்கவிடும் விளையாட்டு ரக்பி. கால்பந்துக்கு இணையான விறுவிறுப்பான விளையாட்டு இது. முதலில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் சுரத் கரேவின் ‘கேஃபாண்ட்ரா’ (KFANDRA) ரக்பி மற்றும் கால்பந்தாட்டப் பயிற்சி மையத்தில் கால்பந்தாட்ட விளையாட்டைத்தான் முதலில் பயிற்சி செய்தேன்.

2008-ல் என்னுடைய பயிற்சியாளர் சுரத் கரேவின் ஊக்குவிப்பால் ரக்பி விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டேன். ரக்பியைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமில்லை.ரக்பி ஆட்டத்தில் ‘ஸ்க்ரம்’ என்று சொல்லப் படும் முன்கள ஆட்டக்காரராக நான் இருப்பேன். ஸ்க்ரம் முன்கள ஆட்டக்காரர்களில் எண் 1 அல்லது 3-ம் இடத்தில் நான் விளையாடுவேன்.

பரதம்…?

நாம் மனதை ஒருநிலைப்படுத்தி ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் எந்த ஒரு கலையுமே நம்மை முழுத் திறமை மிக்கவராக மிளிரச் செய்யும் என்பார் என்னுடைய நாட்டிய குரு பிரியதர்ஷினி கோவிந்த். ‘கலாக்ரியா’ எனும் கலைகளுக்கான அமைப்பு இணைந்து வெளியிட்ட நாட்டியம் சார்ந்த டி.வி.டி.களில் என்னுடைய நடனம் இடம்பெற்றிருக்கும்.

இது நடனம் பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவியாக இருக்கும். நாரத கான சபாவில் அபூர்வா ஜெயராமனுடன் இணைந்து வழங்கிய கிருஷ்ண கர்ணாமிர்தம் என்னும் நாட்டிய நிகழ்ச்சியும், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி பாடகி தீபிகா, இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா அவர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சவாலான அனுபவங்கள். மேலும், அசாம் வேலி பள்ளி, மகா வித்யாலயா, கர்நாடகாவின் அடோனி பள்ளிகளில் நடன செய்முறை விளக்கம் அளித்திருக்கிறேன்.

சாதனைகள்..?

சிறு வயதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து ‘பாலஸ்ரீ’ விருதைப் பெற்றிருக்கிறேன். 2009-ல் நடந்த ‘ஆசியன் வுமன் சாம்பியன்ஷிப்’பில் இந்தியாவின் சார்பாகப் பங்கெடுத்திருக்கிறேன். தவிர, சர்வதேச அளவிலான ‘லெவல் - ஏ ரக்பி கோச்’ சான்றிதழும் பெற்றிருக்கிறேன். நடனத்தில் இருக்கும் ஆர்வம் காரணமாக, லண்டனின் டிரினிடி லாபான் நடனப் பள்ளியில் சம காலத்திய நடனங்களைப் பற்றிய பட்டயப் படிப்பைப் படித்திருக்கிறேன். இதனால் பாரம்பரியமான முறைகளோடும் கற்பனை வளத்தோடும் நடனத்தை ரசிகர்களிடம் கொண்டுசெல்ல முடிகிறது.

ஆவணப்படம்..?

பரத நாட்டியத் துறையில் ஏறக்குறைய மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் நடனத்துக்கான உடைகளை இன்றைக்கும் கனகச்சிதமாகத் தைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர் என்னும் புகழுக்கு உரியவர் டி.எஸ். அய்யாலு (87 வயது). அவரைக் குறித்த ஆவணப்படத்தில் பணியாற்றியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த ஆவணப் படத்தில் வசனம் மற்றும் கருத்தாக்கப் பணியில் பங்களித்திருக்கிறேன். தவிர, ‘நோட்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ என்னும் குறும்படத்திலும் நடித்திருக்கிறேன்.

குரு..?

குரு பிரியதர்ஷினி கோவிந்தின் அன்பான அணுகுமுறை, உணர்வுபூர்வமாக நடனத்தைச் சொல்லிக் கொடுக்கும் பாங்கு ஆகியவை என்னை ஈடுபாட்டோடு நடனத்தைக் கற்றுக்கொள்ளத் தூண்டின. அவரின் அபிநய வகுப்பு, பாட்டு, கவிதை, இசை, நாடகம், சிற்பம் என்று கலையின் பல பரிமாணங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்வகையான கலைகளின் ஊடே நடன வகுப்பை பயில்வது புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது.

லட்சியம்..?

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன்.தற்போது ‘மதராஸிகா’ என்னும் அமைப்பின் வழியாக, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் மாணவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதற்குத் தேவையான தலைமைப் பண்புகள், சமூக விழிப்புணர்வு போன்றவற்றை வளர்க்கவும் பயன்படும் கலையாக பரத நாட்டியத்தை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன். பரதம், கலையாக மட்டுமே பார்க்கப்படும் பார்வையை மாற்றி, சமூகத்தை உயர்த்தும் கருவியாகவும் பார்க்க வைக்க வேண்டும்.!

வெற்றி ரகசியம்...?

பரதம், ரக்பி… இரண்டுக்குமே உடல் வலிமை, மன வலிமை மிகவும் அவசியமானது. இரண்டுமே இடைவிடாத பயிற்சியின் மூலமே எனக்குச் சாத்தியமாயின. அது உங்கள் துறைக்கும் பொருந்தலாம்.

SCROLL FOR NEXT