இளமை புதுமை

உன்னுடைய வயது என்ன என்று கேட்டார்கள்

கா.இசக்கி முத்து

தமிழ்த் திரையுலகில் அவ்வப் போது புதுமுக இயக்குநர்கள் கவனம் ஈர்ப்பதுண்டு. அந்தப் பட்டியலில் 'துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இடம்பெறுவது உறுதி என்கிறார்கள் தமிழ்த் திரையுலகில். கார்த்திக் நரேனின் வயது 21 மட்டுமே. படிப்பில் ஆர்வமின்றிக் குறும்படம் இயக்க ஆரம்பித்து, ஒரே ஒரு படத்தில் மட்டும் இரண்டு ஷெட்டியூலில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது மட்டுமன்றி, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுந்தர்.சி, சுஹாசினி உள்ளிட்ட பலர் சமீப காலத்தில் இப்படியொரு த்ரில்லர் படத்தைக் கண்டதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரும் படக் குழுவினரைப் பாராட்டித் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேனை போனில் அழைத்தபோது, "இந்தக் கதையை எழுதிவிட்டு 5 தயாரிப்பாளர்களைச் சந்தித்துக் கதையைச் சொன்னேன். அனைவருமே, "உன்னுடைய வயது என்ன?" என்றுதான் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சரியாக இயக்கிவிடுவேனா என்ற பயம் இருந்தது. அதில் தப்பில்லை. ஏனென்றால் கோடிகளில் புரளும் வியாபாரத்தில் எல்லோருக்குமே அந்த பயம் இருக்கும். படம் வெளியானவுடன், கண்டிப்பாக இவனால் முடியும் என்று நம்புவார்கள்” என்கிறார் நம்பிக்கையுடன்.

போலீஸ் அதிகாரியான ரகுமான் பணியில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தால் ஊனமாகிவிடுகிறார். அதனால் பணியை விட்டுப் போய்விடுகிறார். ஐந்தாண்டுகள் கடந்த பிறகு அவருக்கு திடீரென்று ஒரு வழக்கு தொடபான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பாதியில் நின்றுபோன அந்த விசாரணையைத் தொடங்குகிறார். அந்த வழக்கில் என்ன நடந்தது, இப்போது அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதுதான் இந்த இளைஞர் எழுதியுள்ள கதை.

“கதை ரொம்ப சிம்பிளாக இருந்தாலும், எடிட்டிங்கில் வித்தியாசப்படுத்தியிருக்கிறோம். நீங்கள் ஒரு காட்சியை மிஸ் பண்ணிவிட்டால் கதை புரியாது. படம் பார்த்துவிட்டு முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை சரியாக வரிசைப்படுத்துவோருக்கு 1 லட்சம் பரிசு அறிவித்திருக்கிறோம்" என்கிறார் கார்த்திக் நரேன்.

இயக்குநர் ஆசை எப்படி வந்தது என்ற கேள்வியை முன்வைத்தபோது, "கல்லூரியில் படிப்பு சரியாக வரவில்லை. குறும்படங்கள் இயக்கினேன். படம் இயக்கலாம் என்று எண்ணியபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. அப்பா, நண்பர்கள் உதவியோடு ‘துருவங்கள் பதினாறு' தயாரித்திருக்கிறேன். 28 நாட்களில் சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி எனத் திட்டமிட்டுப் படம் எடுத்தேன்.

மேலும், படமாக்கிய எந்தக் காட்சியையும் நீக்கவில்லை. என்ன எடுத்தோமோ, அதேதான் படத்திலும் இருக்கும். பணிகள் எல்லாம் முடித்துவிட்டு அப்பாவுக்கும் ரகுமான் சாருக்கும் போட்டுக் காட்டினேன். ‘நம்பினேன். என்னுடைய நம்பிக்கையை வீணாக்கவில்லை’ என்றார் அப்பா. என்னை நம்பி அனுப்பியவரின் கண்ணில் அன்றுதான் சந்தோஷத்தைப் பார்த்தேன். அதே சந்தோஷத்தை எல்லாரும் அடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் நரேன்.

நண்பர்களின் உதவியையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். "கல்லூரியில் எப்போதுமே எனக்கு நண்பர்கள் தான் பக்கபலம். இவன் ஏதோ சும்மா சொல்றான்டா என்று நினைக்காமல், உனக்கு என்ன விருப்பமோ அதை பண்ணுடா என்றார்கள். என்னுடைய நண்பன் ரஞ்சித்தின் வீட்டில் 2 நாள் ஷுட் பண்ணினேன். எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என் நண்பர்கள். நான் வெற்றி பெற வேண்டும் என்று அவர்களால் முடிந்த அளவுக்கு விளம்பரப்படுத்துகிறார்கள்" என்று சொல்பவரின் குரலில் உற்சாகம் பொங்குகிறது.

ஆண்டு இறுதியில் (டிசம்பர் 30) ‘துருவங்கள் பதினாறு' வெளியாகிறது. இதன் மூலம் புத்தாண்டுக்கு நல்லதொரு புதுமுக இயக்குநர் கிடைப்பார் என்று நம்புவோம்!

SCROLL FOR NEXT