இளமை புதுமை

தமிழில் கதை சொல்ல ஆசை!

பவானி மணியன்

அந்த எழுத்தாளர் எழுதிய முதல் புத்தகமே அமேசான் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இடம்பெற்றது. அவரது மூன்றாவது புத்தகத்தின் முதல் பதிப்பு முழுவதும் மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. ‘வெளிநாட்டு எழுத்தாளரோ?’ என்று தேடினால், “ஹலோ! நான் பக்கா சென்னைப் பொண்ணு. குரோம்பேட்டையில வீடு!” என்று கலகலக்க வைக்கிறார் கங்கா. கங்கா பரணி என்பது முழுப் பெயர்.

மென்பொருளாளர் என்பது இவரது பணி. கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதி வருகிறார். ‘ ‘ஸ்க்ரிப்பிள்ட் பை ஜிபி’ என்ற பெயரில் இவர் எழுதும் ‘பிளாக்’கை நூற்றுக்கணக்கானவர்கள் பின்தொடர்கிறார்கள். அந்த வலைப்பூவுக்காகச் சிறந்த வலைப்பதிவர் விருதையும் வென்றுள்ளார்.

ஐ.டி. என்றாலே புராஜெக்ட், டெட்லைன் என்று இருப்பவர்களுக்கிடையில் கங்கா, சமூகப் பிரச்சினைகள் குறித்துக் குறும்படம் எடுத்தல், கதை எழுதுதல் எனக் கொஞ்சம் வேற லெவலில் இருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

“எங்கப்பா நல்லா கதை சொல்வார். அவர்தான் என்னோட எழுதுற ஆர்வத்தைத் தூண்டினார். கல்லூரில படிக்கும்போதே, ஆங்கில நாளிதழ்கள்ல நிறைய கட்டுரை எழுதினேன். அவற்றில் பிரசுரமாகாத கட்டுரைகளை மட்டும் எடுத்து பிளாக்கில் வெளியிட்டேன். பாசிட்டிவான கமென்ட்கள், நிறையப் பேர் பார்வையிட்டதுன்னு மகிழ்ச்சியா இருந்துச்சு. என் பிளாக்கில் முதலில் ஒரு கதை எழுதினேன். நிறைய பேர் பாராட்டினார்கள். என் வாசகர்களில் ஒருத்தர் நானே இந்தப் புத்தகத்தை வெளியிடுறேன்னு சொன்னார். ‘Just You, me and a secret’ என்ற அந்தப் புத்தகம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அடுத்து த்ரில்லர் கதையாக ‘A minute to Death’ எழுதினேன்” என்று சொல்லும் கங்கா ஒரு நிமிட, இரு நிமிட குறும்படங்கள் என இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அதில்

‘Tiny Steps’ என்ற குறும்படம் ‘வீ-கேர்’ சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. அத்துடன் ‘கேன்டில்ஸ்’ எனும் குறும்படம் சிறப்பு விருதை வென்றிருக்கிறது.

மூன்றாவதாக ‘A Sip of love and a Sip of coffee’ எனும் புத்தகத்தை இந்த ஆண்டு மே மாதம் திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன் வெளியிட்டார். இதுவரை ஆயிரம் புத்தகங்கள் விற்றுள்ளன என்கிறார்.

“முதல் காதல் தவறோ, மறைக்கப்பட வேண்டிய ஒன்றோ அல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றைக் கடந்து போக வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தேன். அதைப் படித்துவிட்டு நிறைய அம்மாக்களும் நிறைய மகள்களும் என்னை அழைத்து வாழ்த்துச் சொன்னார்கள். ஆங்கிலத்தில் மட்டும் இப்போது எழுதிவருகிறேன். தாய்மொழியான தமிழில் பேச மட்டும்தான் தெரியும். எப்படியும் தமிழில் ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய குட்டி ஆசை. ஏன்னா, என்னோட ஆங்கிலப் புத்தகங்களைப் படிச்சிட்டு, அந்த கேரக்டரை ஏன் கொன்னுட்டீங்கன்னு என்னோட ரீடர்ஸ் தமிழ்லதான் ஒரு மணி நேரம் சண்டை போடுறாங்கப்பா!” என ஜாலியாக வருத்தப்படுகிறார் கங்கா.

SCROLL FOR NEXT