பயணங்கள் அழகான அனுபவங்களையும், சுகமான நினைவுகளையும் அள்ளித் தருபவை. பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்கள் நிறைந்த இந்தியாவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையான சைக்கிள் பயணம் என்பது, எத்தனை சுவாரஸ்யங்களை அள்ளி வழங்கும்! அதுபோன்ற ஒரு சைக்கிள் பயணத்தில் 3200 கி.மீ சென்னை வந்தடைந்திருந்தது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விழிப்புணர்வுப் பிரச்சாரக் குழு. டி.ஐ. சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியாவின் ‘டிராக் அண்டு ட்ரெயில்’ மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மிட்டவுன் மெட்ராஸ் ஆகியவை நடத்திய இந்த சைக்கிள் பயணத்தில் 21 பேர் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் 7-ம் தேதி காஷ்மீரில் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர்.
அனுபவமிக்க சைக்கிள் ரைடர்களுடன், சவாலான இந்தப் பயணத்தில் ஒரே பெண் ரைடராக வந்திருந்தார் கிருத்திகா. சென்னை ஸோஹோ நிறுவனத்தில் பணியாற்றிவருபவரிடம் பயண அனுபவத்தைக் கேட்டதிலிருந்து…
“சென்னை டிரெக்கிங் கிளப் உறுப்பினராகச் சேர்ந்த பின், நிறைய பயணங்கள் செய்ய ஆரம்பித்தேன். 3 வருஷத்துக்கு முன்னாடி சைக்கிளிங் மேல் விருப்பம் ஏற்பட்டது. குறைவான தூரத்தில் சின்னச் சின்னப் பயணங்களை மேற்கொண்டேன். இந்த வாய்ப்பு கிடைச்சப்போ, எங்க ஆஃபீஸ்ல லீவு கொடுத்தால் நான் போறேன்னு சொல்லிட்டேன். கொஞ்சம் பயம்தான். ஆனா ஊதித் தள்ளிடலாம்னு கிளம்பிட்டேன். ஒரு நாளைக்கு 200 கி.மீ ஓட்டினோம். இதோ இப்போ சென்னை, இன்னும் 1,300 கிலோமீட்டர்தான் பாக்கி. பயணம்தான் என்பவர் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு ஊரிலும் நாங்கள் சந்தித்த கிராம மக்கள் அன்பாக நடந்துகொண்டனர். வேண்டாம்னு சொன்னாலும் தண்ணீர், பிஸ்கெட்னு அவங்ககிட்ட என்ன இருக்கிறதோ, அதைப் பகிர்ந்து கொண்டனர். சின்னப் பசங்களெல்லாம் டாடா சொல்வதும், விதவிதமான மலைகளிடையே பயணங்களும் அழகாக இருந்தன. பெங்களூரு முதல் சென்னை வரை இருபுறமும் காடு. காலையில் பனியுடன் தொடங்கியது பயணம். மழையுடன் இருந்த சாலைகளைப் பார்த்தவுடன் கவிதை எழுதணும்னு தோன்றியது!” என்றவரிடம், ‘பயணம் ரொபக் கஷ்டமா இல்லையா?’ என்று கேட்டோம்.
அவர் பேசுவதற்குள் இடைமறித்து, “சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?” எனத் தொடர்ந்தார் பெங்களூர் கல்லூரி மாணவர் தீரஜ்.
“பில்வாராவில் போயிட்டிருக்கப்போ, எங்களுக்கு முன்னாடி போயிட்டிருந்த ரைடர் கீழ விழுந்துட்டாரு. அடுத்து கிருத்திகா, நான் என வரிசையா விழுந்துட்டோம். ஆனா சைக்கிளிங்ல இதெல்லாம் சகஜம். கீழ விழாம சைக்கிள் ஓட்ட முடியாது. ஆனா எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணிட்டு அடுத்தடுத்துப் பயணத்தைத் தொடர்ந்துட்டோம். இவ்ளோ தூரப் பயணம் என்பது எனக்கும் முதல் முறைதான். ஆனால் சாலைப் பயணங்கள் அழகானவை. புதிய பாதைகளும், பயணங்களும் அழகான வாழ்க்கைக்கு நம்மைக் கொண்டு செல்லும்னு நான் நம்புறேன். அதனால் நாங்கள் இன்னும் குழுவாக நிறைய சைக்கிள் ரைட் போகலாம்னு இருக்கிறோம்” என்றார்.
இந்தக் குழுவினர் டிசம்பர் 6-ம் தேதி தங்களின் பயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்திருக்கிறார்கள்.
செம ரைடிங்மா..!