இளமை புதுமை

தொப்பி அணிந்த சூஃபி புயல்!

வா.ரவிக்குமார்

இந்திய இசை மரபில் பஜனை பத்ததி மிகவும் பழமையானது. அந்த அளவுக்கு சூஃபியானா கவ்வாலியும் மிகவும் பழமையான இசை மரபைக் கொண்டது. இந்த இசை மரபில் 13-ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் அமீர் குஷ்ரோ. இவரின் பாடல்கள் சூஃபி இசை மேடைகளில் இன்றைக்கும் பிரபலம். ‘அமீர் குஷ்ரோ சங்கீத் அகாடமி’ கடந்த 16-ம் தேதி மியூசியம் அரங்கத்தில் ஓர் இசைச் சூறாவளியை அறிமுகப்படுத்தினர்.

ஹரியாணாவின் சிறிய கிராமத்திலிருந்து வந்திருந்த இம்ரான் ராஜா சப்ரி என்னும் சிறுவன், மொழியைக் கடந்து அங்கிருந்த அனைவரையும் 2 மணி நேரத்துக்கும் மேலாகத் தன்னுடைய மேன்மையான இசையால் கட்டிப்போட்டார்.

விளையும் பயிர்

நான்கு வயதிலிருந்து இசைப் பயிற்சியைத் தொடங்கிவிட்ட இம்ரானுக்கு இப்போது வயது 13. விளையாட்டுப் பையனாகத் தோற்றத்தில் தெரிந்தாலும், இசையில் பல மடங்கு முதிர்ச்சி தெரிகிறது. இந்த வயதில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸில் மூழ்கியிருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் சூஃபி இசை இந்தச் சிறுவனுக்குள் எந்த அளவுக்கு மூழ்கியிருக்கின்றது என்பதற்கு அன்றைக்கு வெளிப்பட்ட அவரின் நுட்பமான இசையே சாட்சியாக இருந்தது (இந்த வயதிலேயே தத்துவ வரிகளை சொந்தமாக எழுதத் தொடங்கியிருக்கிறார் இம்ரான்).

“மிகச் சிறிய வயதிலேயே என்னுடைய தாத்தா இக்பால் அப்சல் சப்ரியிடம் இசைப் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அதன்பின் என்னுடைய அப்பா சர்ஃப்ராஸ் சப்ரியிடமும் பயிற்சி பெற்றுவருகிறேன்” என்கிறார் இம்ரான்.

வட இந்தியத் திருமண வீடுகளில் இன்றைக்கும் மணமகன், மணமகள் குடும்பத்தினர் இரண்டு அணிகளாகப் பிரிந்து கேலி, கிண்டல் தொனிக்கப் பாடல்களைப் பாடுவது வழக்கம். இதுபோன்ற பாடல் முறைக்கு கவ்வாலி என்று பெயர்.

தமிழகத்திலும் ஊஞ்சல் பாட்டு, சீர் பாட்டு போன்றவை திருமண வீடுகளில் வழக்கத்தில் இருக்கின்றன. இதுபோன்ற திருமண வீட்டில் நிகழும் பாடல்கள் எல்லாமே பெரும்பாலும் கேள்வி, பதிலாகவே இருக்கும்.

பழைய தமிழ்ப் படம் ஒன்றில் ஒலித்த ‘பாரடி கண்ணே கொஞ்சம்… பைத்தியம் ஆனது நெஞ்சம்…’, ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே...’ போன்ற பாடல்கள் இந்த ரகம்தான். ஆனால் இதுபோன்ற ஜனரஞ்சகமான கவ்வாலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது சூஃபியானா கவ்வாலி.

மனித நேய இசை

கலைந்த கனவுகள், சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை, மிகப் பெரிய இறைவனின் முன் நிற்கும் அவனுக்குக் கீழ்ப்படிந்த மனிதன் போன்ற தத்துவத் தெறிப்புகளோடு இவரின் பாடல் வரிகளில் (ஷயாரி) மனித நேயமும் வெளிப்பட்டது.

தினமும் மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் பயிற்சி செய்யும் இம்ரான், அவரின் தாத்தா உஸ்தாத் இக்பால் அப்சல் சப்ரியின் குலாம்களையே (தத்துவப் பாடல்கள்) பெரிதும் தன்னுடைய கச்சேரியில் பாடுவேன் என்றார்.

இடி, மின்னல் கூட்டணி

அரங்கில் இம்ரானின் தெவிட்டாத இசை மழையின் தீவிரம் சற்றும் குறையாமல் இடியாக காதரின் தபேலாவும், மின்னலாக உசேனின் டோலக்கும், முபாரக்கின் பேன்ஜோவும் பலமான கூட்டணி அமைத்தன. மகன் இம்ரானின் ஸ்ருதிக்கு ஏற்ப இணையாகப் பாடியதுடன் ஆர்மோனியமும் வாசித்தார் அவரின் தந்தை சர்ஃபராஸ்.

SCROLL FOR NEXT