இளமை புதுமை

கேம்பஸைக் கலக்கும் ஹைப்ரிட் கார்

செய்திப்பிரிவு

மாற்றி யோசிப்பதற்கு எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பதை மாணவர்கள் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றனர். சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மாணவர்கள் இதற்குச் சிறந்த உதாரணம். அவர்கள் புதிதாக உருவாக்கியிருக்கும் ஹைப்ரிட் கார் (கலப்பு கார்) பற்றித்தான் கேம்பஸே பேசிக்கொண்டிருக்கிறது.

பிரமோதன், பிரேம் குமாரா, ராம் பிரசாத், லோகேஸ்வரன் ஆகிய நால்வரும் இணைந்து மூன்று விதமான ஆற்றலில் இயங்கக்கூடிய ஹைப்ரிட் காரை உருவாக்கியிருக்கிறார்கள்.

தங்களுடைய கடைசி ஆண்டு புராஜெக்ட்டுக்காக இந்த ஹைப்ரிட் காரை உருவாக்கியுள்ள பிரமோதன், கார்களை இயக்குவதற்கு பெட்ரோலை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியதில் ஹைப்ரிட் கார்களுக்கு பெரும் பங்கிருக்கிறது என்கிறார். “எங்கள் கார் சூரிய ஒளி, மின்சாரம், பெட்ரோல் ஆகிய மூன்று ஆற்றல்களிலும் இயங்கும்” என்கிறார்.

பழைய கார்களில் இருந்து கிடைத்த பெரும்பாலான பாகங்களைக் கொண்டே இந்த ஹைப்ரிட் காரை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் 25 கிலோமீட்டருக்கு மின்சார ஆற்றலில் ஓடும் இந்த கார், பிறகு தானாகவே தன் ஆற்றலை மாற்றிக்கொள்கிறது. இந்த காரை உருவாக்குவதற்கு ரூ. 1,33,000 செலவானது.

“கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே பேட்டரிகள் சார்ஜ் ஆகும்படி வடிவமைத்திருக்கிறோம். இப்போதைக்கு எங்கள் ஹைப்ரிட் கார் சூரிய ஆற்றலில் 35 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் பிரமோதன்.

ஆவடி நகராட்சி 1000 குப்பை வண்டிகளை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கித் தருமாறு இவர்களை அணுகியிருப்பதால் ‘பிரமோதன் அண்ட் கோ’ உற்சாகமாக உள்ளனர்.

- என். கௌரி

SCROLL FOR NEXT