ஒரு நடிகருக்கு ஒரே நாளில் 3 படங்கள் வெளியாவது என்பது அரிதான ஒன்று. அக்டோபர் 7-ம் தேதி வெளியான ‘ரெமோ’, ‘றெக்க’ மற்றும் ‘தேவி’ ஆகிய படங்களில் ‘பிரசன்ட் சார்’ சொல்லியிருந்தார் சதீஷ். காமெடியில் கவுன்ட்டர் கொடுத்துக்கொண்டிருந்த சந்தானம், ஹீரோ ரேஸில் ஓட, சந்தானம் இல்லாத இடத்தை இவரின் ‘டைமிங் சென்ஸ்’ நிரப்புகிறது. அவருடைய கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு தந்த சந்தோஷத்தில் இருந்தவரிடம் பேசிய போது...
மூன்று படங்களில் உங்களுடைய கதாபாத்திரத்துக்கான வரவேற்பு எப்படி?
ஒரே நாளில் வெளியாக வேண்டும் என்று நான் நடிக்கவில்லை. எதார்த்தமாக நடந்தது. மூன்றுக்குமே வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் பாக்கியராஜ், ரத்தின சிவா மற்றும் விஜய் சாருக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.இந்தக் கதாபாத்திரங்களை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் அளித்தார்கள். அதனைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
காமெடியனாக வர வேண்டும் என்று நினைத்துத்தான் திரையுலகுக்கு வந்தீர்களா...
சினிமாவுக்கு வந்தபோதிலிருந்து காமெடிதான் என் சாய்ஸ்! சின்ன வயதிலிருந்தே யார் என்ன பேசினாலும், அதற்கு கவுன்ட்டர் கொடுத்துப் பேசுவேன். அப்புறம் கிரேசி மோகன் சார் படங்கள், கவுண்டமணி சாருடைய படங்கள் எல்லாம் விரும்பிப் பார்ப்பேன். அவைதான் நான் காமெடியைத் தேர்வு செய்யக் காரணம்.
உங்களுக்கான காமெடி வசனங்களை நீங்களே எழுதுகிறீர்களாமே. அதற்கான சுதந்திரத்தை இயக்குநர்கள் கொடுக்கிறார்களா?
நான், நாயகன் மற்றும் இயக்குநர் மூவரும் பேசிக் கொள்வோம். ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால் உடனே இயக்குநரிடம் பேசி நட்பாகி விடுவேன். ஆகையால் நான் ஏதாவது ‘பஞ்ச்’ வசனங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். விஜய் சாருடன் நடிக்கும் போதுதான் கொஞ்சம் பயமாக இருந்தது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு முன்னால் நம்முடைய ‘பஞ்ச்’ வசனங்கள் எடுபடுமா என்று நினைத்து தயங்கினேன். ஆனால், விஜய் சார்தான் என்னை ‘கூல்’ செய்தார்!
திரையுலகப் பின்புலம் இல்லாமல் நடிக்க வந்திருக்கிறீர்கள். திரையுலகில் ஆதரவு எப்படியிருக்கிறது?
முதலில் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது. ஆனால் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நான் இழக்கவே இல்லை. பள்ளியில் நாடகங்களில் நடித்து பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அதே போன்று இங்கேயும் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தேடி அலைந்தேன். கவுண்டமணி சார் போன பாதையில் நாமளும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இப்போது தான் ஒட ஆரம்பித்திருக்கிறேன், இன்னும் அடைய வேண்டிய தூரம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
கிரேசி மோகனிடம் பணியாற்றிய போது, நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
எந்தப் படப்பிடிப்புக்குப் போனாலும், எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக வேண்டும். நான் கிரேசி மோகன் சார் நாடகங்களில் நடிப்பதற்கு முன்பாக, பெண்கள் வேடம் உட்பட நடிப்பதற்கு தயாராகவே இருப்பேன். அவருடைய காமெடியில் கெட்ட வார்த்தை காமெடி என்பது இருக்காது. அதை சினிமாவிலும் செய்து வருகிறேன். அதுதான் கிரேசி சார் ஸ்பெஷல்.
சமீபத்தில் ஒரு படத்தில் ‘டபுள் மீனிங்’ வசனம் பேசச் சொல்லிக்கூட இயக்குநர் ரொம்ப வற்புறுத்தினார். ஆனால், அவரிடம் மிகவும் கெஞ்சி வேண்டாமே என்று மாற்றினோம். 'ரெமோ'வில் எவ்வளவு இரட்டை அர்த்த வசனங்கள் வைத்திருக்கலாம் என்று படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், எனக்கு டபுள் மீனிங் காமெடி பண்ணி பெயர் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களைக் கலாய்த்துத்தான் காமெடி பண்ணுகிறீர்கள். இதான் உங்க ஸ்டைலா?
பழைய படங்களில் ‘ட்ராக் காமெடி’ என்று ஒன்று இருந்தது. கவுண்டமணி சார் திரையுலகுக்கு வந்தவுடன்தான் காமெடிக்கு கலரே மாறியது. வடிவேலு சார் இரண்டுமே பண்ணினார். விவேக் சார், சந்தானம் சார் பார்த்தீர்கள் என்றால் கவுண்டமணி சாரின் கலாய்ப்பு காமெடியைத் தான் ஃபாலோ பண்ணுகிறார்கள். கவுண்டமணி சார் தொடங்கி வைத்தது இப்போது வரை ட்ரெண்டில் இருக்கிறது. காமெடி என்பது நம்மை சுற்றித்தான் இருக்கிறது. அதனை எப்படி நாம் உபயோகப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணமில்லை. குறைந்த படங்களே பண்ணினாலும் ஜாலியாகப் பண்ண வேண்டும் என்றுதான் ஆசை.