“கல்வி கடைச்சரக்காகும் நிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதற்குப் பிறகு உச்சத்தைத் தொட்டது. ‘நெட்’ தேர்வு தேவைப்படாத பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நல்கையை, இந்த அரசு நிறுத்த முயற்சித்தபோது பெரும் மாணவ எழுச்சியை இந்த நாடு கண்டது. அப்படிப் பார்த்தால் ‘ஆக்குபை யு.ஜி.சி.’ போராட்டம், முன்பு நடந்த போராட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகப் பெரிய வெற்றியைக் கண்ட போராட்டமாக உள்ளது...”
இப்படிப் போகிறது அந்தக் கல்லூரி மலரில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரையை எழுதியவர் அஞ்சலி. அதை விடப் பெரிய பெருமை, அந்தக் கல்லூரி மலரின் ‘ஸ்டூடன்ட் எடிட்டர்’ அவர்தான். அந்த மலரைக் கொண்டுவருவதற்காக அவரும் அவரது நண்பர்களும் பட்டபாடு, மாணவ அரசியல் வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒன்று.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2015 2016-ம் ஆண்டுக்கான மாணவர் மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் அஞ்சலியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவரின் ‘எடிட்டர்ஷிப்’ தலைமையில் வெளியாகியிருக்கும் ‘வைடர்ஸ்டாண்ட்’ கல்லூரி மலரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஜெர்மன் மொழியில் ‘வைடர்ஸ்டாண்ட்’ எனும் சொல்லுக்கு, ‘எதிர்ப்பு’ என்று பொருள் கிடைக்கும். 1926-ம் ஆண்டு ‘தேசிய போல்ஷிவிஸ’த்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், அதன் மூலம் ஹிட்லரின் ஃபாசிஸ அடக்குமுறையை எதிர்ப்பதற்காகவும் எர்னஸ்ட் நீக்கிஷ் என்பவரின் ‘எடிட்டர்ஷிப்’ தலைமையில், ‘வைடர்ஸ்டாண்ட்’ எனும் பத்திரிகை கொண்டுவரப்பட்டது.
1934-ம் ஆண்டு அந்தப் பத்திரிகை மூடப்பட்டது. தொடர்ந்து 1937-ம் ஆண்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஐ.ஐ.டி. சென்னை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எனப் பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிரான மாணவர் போராட்டங்களும் பெரிய அளவில் நடந்திருக்கின்றன.
இவை குறித்த அரசியலை, கருத்தியல்களை, மாற்றுப் பார்வைகளை மாணவர்களிடையே கொண்டுசெல்வதற்காக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நடப்பு மாணவர் மன்றத்தின் முயற்சியால் கல்லூரி மலர் ஒன்று கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. அந்த மலருக்கான பெயர், மேற்கண்ட ஜெர்மன் பத்திரிகையிலிருந்துதான் எடுக்கப்படுகிறது.
அந்த மலரைப் புரட்டினால், ஒவ்வொரு பக்கமும் புரட்சி வெடிக்கின்றன. முதல் சில பக்கங்களில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த, சிறை சென்ற மாணவர்களை ‘தியாகிகள்’ என அங்கீகரித்து, அவர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்து வரும் பக்கங்களில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் கொடுமைகள், கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள், பெண்கள் மீதான வன்முறைகள், நாட்டைக் காவிமயப்படுத்தும் நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பல்வேறு துறை மாணவர்களால் கவிதையாக, கட்டுரையாக, ஓவியமாக, நினைவுக் குறிப்புகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி 112 பக்கங்களும் கனமான விஷயங்களைக் கொண்ட பத்திரிகை இந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி மாநாடு ஒன்றில், பல்கலைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப் பட்டது. ஆனால் வெளியான சில தினங்களிலேயே பல்கலைக்கழகத்தினுள் இருக்கும் சில இந்துத்துவ மாணவர் அமைப்புகள், பத்திரிகையின் உள்ளடக் கத்தைக் காரணமாகக் காட்டி பத்திரிகையின் பிரதிகளை எரித்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தால் அந்தப் பத்திரிகைக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
அதன் பின் எவ்வாறு அந்தப் பத்திரிகை மீட்டெடுக்கப்பட்டது என்பதை அஞ்சலியே கூறுகிறார்...
“அதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, நாங்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து விளக்கிவிடுகிறேன்” எனும் அஞ்சலி, அந்தப் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பட்டமேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஆவார்.
“நானும் எனது நண்பர்கள் சிலரும் ‘இந்திய மாணவர் பேரவை’யைச் சேர்ந்தவர்கள். நாங்களும் ‘அம்பேத்கர் மாணவர் சங்க’த்தைச் சேர்ந்த சில நண்பர்களும் இணைந்து மாணவர் மன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் சில இந்துத்துவ மாணவர் அமைப்புகளும் போட்டியிட்டன. ஆனால் எங்களுக்குப் பெரும்பாண்மை கிடைத்தது” என்றவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
“வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டது, ஆண்கள் விடுதியிலிருந்து வந்த தொடர் புகார்களால் அங்கிருந்த சமையல்காரர்களை மாற்றியது, நூலக இணைப்புக் கட்டிடத்தைத் திறந்தது, நூலக நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்தது, முதன்முறையாகக் கல்லூரி மலர் கொண்டுவந்தது என நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு செய்த பணிகள் பல.
கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி நிலையங்களில் நிலவிவரும் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து இங்கு படிக்கும் சக மாணவத் தோழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தார்வத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆண்டுக்கு ஒரு முறை கல்லூரி மலர் கொண்டுவரலாம் என்கிற முடிவை எடுத்தோம்.
ஆனால், முதல் ஆண்டு முதல் மலரே, நெருப்பில் பூத்து வந்தது. ஆம். இந்த மலர் வெளியான சில தினங்களிலேயே பல்வேறு உள் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு சில இந்துத்துவ மாணவ அமைப்புகளால் பிரதிகள் எரிக்கப்பட்டன. அந்தப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த அறை பல்கலைக்கழக நிர்வாகிகளால் பூட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாங்கள் பல்கலை வளாகத்திலேயே பேரணிகள் நடத்தினோம். பட்டினிப் போராட்டம் நடத்தினோம். எங்களை அடித்தார்கள். வசைபாடினார்கள். மிரட்டினார்கள். ஆனால் நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. மாணவர் ஒற்றுமையால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகை வெளிவந்தது” என்று பெருமூச்சு விடுகிறார்.
சுமார் 7 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த மலர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பத்திரிகையின் மாணவ எடிட்டர் என்கிற முறையில், இந்தப் போராட்டங்களி லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
“இன்று பெரும்பாலான மாணவர்கள் அரசியலில் ஆர்வமற்று இருப்பதைப் பார்க்கிறேன். உதாரணத்துக்கு எங்கள் போராட்டத்தையே எடுத்துக்கொள்ளலாம். சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு ஆதரவாக நின்றது வெறும் 300 பேர்தான்.
அரசியலில் பங்குகொள்ளாமல் இருப்பதற்கு அவர்களின் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், நண்பர்களே புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள்தான் போராட வேண்டும். உங்கள் எதிர்ப்பை எழுத்து, கலை என எதன் மூலமாகவாவது நீங்கள்தான் பதிவு செய்ய வேண்டும். உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகிற பட்சத்தில், எதிர்த்துப் போராடுங்கள். அதிகார மையங்களால் மக்கள் விரோத நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் போது, உங்கள் நிலை ‘எதிர்’ என்பதாக இருக்கட்டும்!
மற்றபடி, ஒரு ஸ்டூடன்ட் எடிட்டராக, இந்தப் போராட்டத்தில் எனக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், சில பேராசிரியர்கள் ஆகியோரின் ஆதரவு இருந்ததால் என்னால் அந்த அழுத்தத்தைக் கடந்து வர முடிந்தது!” என்றார் புன்னகையுடன்.
இப்போது இந்த மாணவர் மன்ற நிர்வாகிகளுக்கு இருக்கும் ஒரே கவலை, அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மலர் தொடர்ந்து வெளிவருமா என்பதுதான். இந்த மலரில் ஆசிரியர் குழு அளித்திருக்கும் முன்னுரையில், ‘வா, தெருக்களில் சிந்தப்பட்டிருக்கும் ரத்தத்தைப் பார்’ எனும் நெருதாவின் வரி சமீபமாக மாணவர்கள் மீது ஏவப்படும் வன்முறையைத் தொடர்புபடுத்தி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அந்த முன்னுரை ‘ஆம், நாங்கள் எதிர்க்கிறோம்’ என்ற வரிகளுடன் முடிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ‘எதிர்ப்பில்’ எத்தனை மாணவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காலம் சொல்லும்!