இளமை புதுமை

கார்... கருணை... கபிலன்!

பவானி மணியன்

சால்ட் அண்ட் பெப்பர் லுக், ஒற்றைக் காது கடுக்கண், டாட்டூ குத்திக் கொள்வது, பைக், கார்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வலம் வருவது… இதெல்லாம் இன்றைய கல்லூரி மாணவர்களின் ‘ஸ்டேட்டஸ்’. ஆனால் கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம் (சி.ஏ.) இரண்டாமாண்டு படித்து வரும் கபிலன் திருமாவளவனின் ஸ்டேட்டஸ் வித்தியாசமானது. தனது காரை உடல் உறுப்பு தானத்துக்காக விளம்பரப்படுத்திவருகிறார்!

தனது ஃபோர்ட் – இகோ ஸ்போர்ட் காரின் இருபுறமும் தேசியக் கொடி ஸ்டிக்கர், பின்புறம் சக்கரம், முன்புறம் தூய்மை இந்தியா பிரச்சார வாசகம் எனக் கோவை நகரை வலம் வருகிறார். ஆர்வம் பொங்க விசாரிப்பவர்களுக்குப் பொறுமையாக உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கமளிக்கிறார்.

‘அடடா… கார் மூலம் கருணைத் தொண்டா?’ என்று ஆச்சரியப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம். மற்றவை அவரே சொல்கிறார்…

“நான் பிறந்தது தமிழகம் என்றாலும் வளர்ந்தது கத்தார் நாட்டில்தாங்க. அங்கே தேசிய விடுதலை நாளன்று, தங்களுடைய கார்களை, அந்த நாட்டின் கொடி, பாரம்பரியச் சின்னங்களால் அலங்கரிச்சிடுவாங்க. அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இங்கே ஆகஸ்ட் 15-ம் தேதியையும் அதே மாதிரி கொண்டாடினா என்னன்னு தோன்றியது. அதனால் கார் முழுவதும் மூவர்ணக் கொடி ஸ்டிக்கரை ஒட்டினேன்” என்பவரின் கார் பெட்ரோல் டேங்க் மேல் க்யு.ஆர் கோடு (Quick Response code) ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருக்கிறார்.

“ஒருவர் இந்த க்யு.ஆர் கோடினை ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கேன் செய்யும்போது, இந்தியத் தொழிற்கூட்டமைப்பு(CII) >www.giftanorgan.org, என்ற இணைப்பு வரும். அதில் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், தங்களின் விவரங்களைப் பதிவு செய்தால் போதும். உடனே உடல் உறுப்பு தானம் செய்ததற்கான சான்றிதழ் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறுவதன்மூலம் ஒருவர் 8 முக்கிய உறுப்புகளைத் தானம் செய்ய முடியும். எனவே அரசுப் பொதுமருத்துவமனைக்குச் சென்றுதான் உடல் உறுப்பு தானச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதில்லை” என்பவர் தானும் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். இவரின் கார் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இதுவரை 40 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

‘இப்படிப் பிரச்சாரம் செய்யற உங்களை யாரும் கலாய்க்கலயா ட்யூட்’ எனக் கேட்டால்,

“இது என்ன புது மாதிரி விளம்பரமா என்று கேட்கிறவங்கக் கிட்ட, நான் பொறுமையா எடுத்துச் சொல்வேன். அப்புறம் அவங்களே பாராட்டிட்டுப் போவாங்க. சுதந்திர தினத்துல இருந்து இதுவரை கோவையைச் சுற்றி ஆயிரம் கி.மீ தாண்டி கார் ஓட்டியிருக்கே ன். அடுத்த கட்டமாக, ரோட்டராக்ட் மூலம் உடல் உறுப்பு தானம் பண்ணனும்னு, 300 பசங்க சொல்லிருக்காங்க” என்பவர் கழிவு மேலாண்மை தொடர்பான தொழில்முனைவோராக வேண்டும் என்று திட்டமிட்டுவருகிறார்.

‘இந்த விழிப்புணர்வு மட்டும் போதுமா’ என்று கேட்டதற்கு, “பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு மணி நேரத்தில் 3,000 பேர் உடல் உறுப்பு தானம் செய்து உலக சாதனை செஞ்சிருக்காங்க. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் (அன்று ‘உலக உடல் உறுப்பு தான நாள்’) நம்ம ஊர்ல அதைவிட அதிக எண்ணிக்கையில் உடல் உறுப்பு தானம் செய்யணும். அதுக்கு நண்பர்களை, இளைஞர்களைத் திரட்டும் முயற்சியில இறங்கியிருக்கிறேன்.

எங்க காலேஜ்ல மத்தவங்க வண்டியெல்லாம் பார்க்கிங்ல நிற்கும்போது என் காரை மட்டும் பி.காம். பிளாக் முன்னாடி நிறுத்த அனுமதி கொடுத்திருக்கார் எங்க முதல்வர் ராஜேந்திரன் சார். தினமும், நிறைய இளைஞர்கள் நம்ம கார் முன்னாடி நின்னு செல்ஃபி எடுத்துக்கிறதப் பார்க்கும்போது அவங்க மூலமா இன்னும் நிறைய பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருவாங்கன்னு நினைக்குபோது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்” என்கிறார் கபிலன்.

SCROLL FOR NEXT