இளமை புதுமை

ஓவிய பா(ர்)வைகள்!

இந்திரா செளந்தர்ராஜன்

அக்டோபர் 10: உலக மனநல நாள்

மனதிலிருப்பதை நம்மால் தத்ரூப ஓவியமாக வரைய முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் மனநலம் காக்க வேண்டியதன் அவசியம் பற்றி அந்தப் பெண்கள் வரைந்திருந்த ஓவியங்கள் நம்மை விழிப்புக் கொள்ளச் செய்கின்றன.

வி.ஆர்.ரோஸ் மோனிகா வரைந்த ஓவியங்கள்

வி.ஆர்.ரோஸ் மோனிகா, பா.காவியா, சி.ரம்யா ஆகிய மூவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் அரசு மனநல காப்பகத்தில் மனநலத் துறை பிரிவில் பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவிகள்.இயல்பாகவே ஓவியத் திறமை கொண்ட இவர்கள், உலக மனநல நாளையொட்டி, மனநலம் தொடர்பான ஓவியங்களை வரைந்திருந்தனர். அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் முக்கியமான மனநலப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகின்றன.

‘சுவர்களுக்கும் காதுகள் உண்டு' என்ற ஒரு சொற்றொடர் உண்டு. ஆனால் சுவர்களுக்குக் குரலும் உண்டு என்பதைச் சொல்கிறது ரோஸ் மோனிகாவின் ஓவியம். “பலருக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. ‘என் காதுக்குள்ளாற யாரோ பேசுற மாதிரி இருக்கு', ‘அவனைக் கொன்னுடுன்னு என்கிட்ட யாரோ சொன்னாங்க', ‘என்னோட பேரை அடிக்கடி யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு' என இப்படி நிறையப் பேர் புலம்புறதை நாம் பார்த்திருக்கலாம். இதை ஆங்கிலத்துல ‘ஹாலுசினேஷன்ஸ்'னு சொல்வோம். இதுமாதிரியான பிரச்சினை உள்ளவங்களை உடனடியா கவனிக்கணும்” என்றார்.

காவியா வரைந்த ஓவியங்கள்

பா.காவியாவின் ஓவியம் தற்கொலை தொடர்பானது. “இன்னிக்கு இளைஞர்கள் நிறைய பேர் மன அழுத்தத்துடன் இருக்கிறதைப் பார்க்கிறோம். மனசுக்குள்ளாற தற்கொலை எண்ணங்கள் ஓடிட்டு இருக்கும். ஆனா, வெளியில அதையெல்லாம் காட்டிக்காம ‘நான் நல்ல இருக்கேன்'னு முகமூடி மாட்டிக்கிட்டு இருப்பாங்க. அவங்களோட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுனா போதும். அவங்களை தற்கொலை எண்ணங்களிலிருந்து வெளிய கொண்டு வந்துரலாம். அதைத்தான் என் ஓவியம் சொல்லுது” என்றார்.

‘மனமே பூட்டு. மனமே சாவி' எனும் தத்துவம் சொல்கிறது ரம்யாவின் ஓவியம். “நம் ஒவ்வொருவருக்குள்ளயும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு. தீர்வுகள் இல்லாத பிரச்சினைன்னு எதுவுமே கிடையாது. ஆச்சரியம் என்னன்னா... அந்தத் தீர்வுகளும் நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதுதான். அந்தச் சாவியை நாம் கையில் எடுத்துக்கிட்டா போதும். நம்மைக் கட்டிப்போட்டிருக்கிற எல்லா சங்கிலியிலிருந்தும் நாம் விடுதலை ஆகிடலாம்” என்கிறார் ரம்யா.


ரம்யாவின் ஓவியங்கள்

இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவகுமாரிடம் கேட்டபோது, “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப் பொருளை முன்னிறுத்தி மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் கருப்பொருள் ‘மனநல கண்ணியமும் மனநல முதலுதவியும்' என்பது. அதாவது, மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களை ஒதுக்கித் தள்ளி தனிமைப்படுத்தாமல், அவர்களையும் நம்மோடு அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கருப்பொருளின் சாராம்சம்.

மேலும், பிறரின் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களுக்கு எப்படி நாம் முதலுதவி அளிக்கிறோமோ அதே போலப் பிறருக்கு ஏற்படும் சிறு சிறு மனக் குழப்பங்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் மூலம் நாம் முதலுதவி அளிக்க வேண்டும் என்பதையும் இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது. அதற்கான முறையான பயிற்சிகளை இளைஞர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றார்.

- அரவிந்தன் சிவகுமார்

SCROLL FOR NEXT