காவிரிப் பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கும் நேரம் இது. இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு வாய்ப்பு; மற்ற மாநிலத்தையும் அந்த மாநிலத்தின் மக்களையும் எந்த அளவுக்கு எதிரிகளாக அவர்கள் சித்தரித்துக் காட்டுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு அரசியலில் ஆதாயம் ஏற்படும். அந்த அரசியல்வாதிகள் பற்ற வைக்கும் பொறியை ஊடகங்களும் சமூக ஊடகங்களும் மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றன.
ஆனால், இது ஒரு பக்கம் மட்டுமே! அன்பையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் மக்கள் இரு தரப்பிலுமே இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் இல்லையென்றால் இந்த உலகமே போர், கலவரம் போன்றவற்றில் சிக்கி என்றைக்கோ அழிந்துபோயிருக்கும். இப்படிப்பட்ட எளிய மனிதர்களின் எளிய அன்பு காவிரிப் பிரச்சினைக்கிடையில் மனிதத்துக்கு எப்படி மருந்து தடவுகிறது என்பதைப் பற்றியதுதான் ‘காவேரி’ என்ற குறும்படம்.
மொத்தம் இரண்டே நிமிடங்கள்தான். மும்பையில், நிழற்பாங்கான ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு கணவனும் அவனது கர்ப்பிணி மனைவியும் நடந்து வருகிறார்கள். அந்தக் கணவன் தன் கைபேசியில் யாரிடமோ கன்னடத்தில் பேசிக்கொண்டிருக்க, பின்னே மெதுவாகவும் அயர்வாகவும் அந்தப் பெண் நடந்துவருகிறாள். அவர்கள் இருவருக்கும் பின்னால் வேட்டி சட்டையுடன் ஒருவர், பங்ச்சர் ஆன தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வருகிறார்.
கணவனின் பேச்சு முழுக்க காவேரிப் பிரச்சினை குறித்ததாக இருக்கிறது. ‘நமக்கே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். அவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தர முடியாது… சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டாலும் விட்டுடாதீங்க, நாம யாருன்னு அவங்களுக்குக் காட்டணும். இந்தப் பிரச்சினைய அப்படியே விட்டுட முடியாது’ என்று கொதிப்புடன் பேசிக்கொண்டிருக்கிறான்.
அவனுக்குப் பின்னால் நடந்துவரும் மனைவிக்குக் கண்கள் இருள, நாக்கு வறள, கையை நீட்டிக் கணவனை அழைக்க முயல்கிறாள், ஆனால் முடியவில்லை. மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிடுகிறாள். பதறிப்போகும் கணவன், பின்னால் வருபவரிடம் ‘தண்ணீர் இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்கிறான். அவர் தனது சைக்கிளில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து கொடுக்கிறார். அந்தக் கணவன் தனது மனைவியைத் தாங்கிக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளிக்க அவள் விழித்துக்கொள்கிறாள்.
கொஞ்சம் தண்ணீரும் குடிக்கிறாள். தண்ணீர் பாட்டிலை வேட்டி சட்டைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து, ‘ரொம்ப நன்றி சார். தெய்வம் மாதிரி வந்து தண்ணீ தந்திங்க!’ என்று சொல்லிவிட்டு, ‘சார் உங்க பேரு என்ன? கன்னடத்தவரா நீங்கள்?’ என்று கேட்கிறான். அவரோ, ‘ஊரு பேருல என்னப்பா இருக்கு? உங்களுக்குத் தேவையானது என்கிட்ட இருந்துச்சு. அதனால கொடுத்தேன். நீங்களும் மனுசன், நாங்களும் மனுசன்தாம்பா’ என்று தமிழில் சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்கிறார். ‘தமிழா’ என்று அதிர்ந்தும் நெகிழ்ந்தும்போய் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே அவர் போன திசையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். கர்நாடகம் தர மறுக்கும் தண்ணீர், அங்கே கண்ணீராக அவன் கண்களிலிருந்து கொட்ட ஆரம்பிக்கிறது!
ஆபெல் அஷ்வின் என்பவர் இயக்கி நடித்திருக்கும் இந்த இரண்டு நிமிடக் குறும்படம் நம் இரு தரப்பு அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிக மிக முக்கியமான ஒரு பாடத்தை வழங்குகிறது. அன்பைவிட நீர் ஒன்றும் பெரிதில்லை என்பதுதான் அந்தப் பாடம்!
</p>