இளமை புதுமை

எந்த வயதிலும் குறி வைத்து அடிக்கலாம்!

ஆர்.சி.ஜெயந்தன்

எழுபது மீட்டர் தூரத்தில் 20 இலக்குப் பலகைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது அம்புகள் பாய்ந்து சென்று தாக்க வேண்டிய இலக்குகள் கருப்பு வெள்ளை வரைபடங்களாகக் கண்களைப் பறித்துக்கொண்டிருக்க ‘ரெடி… எய்ம்…’ என்று குரல் கொடுத்தார்கள் நடுவர்கள். கைகளில் கலர் கலரான வில்களைத் தோள்களின் உயரத்துக்குக் கம்பீரமாக உயர்த்திப் பிடித்திருந்த வீரர்கள் அத்தனைபேரும் அலர்ட் ஆனார்கள். இப்போது நடுவர்கள் ஒரே நேரத்தில் விசில் கொடுக்க, அம்புகள் காற்றைக் கிழித்தபடி பாய்ந்து செல்லும் ‘விர்ர்..விர்ர்…’ ஒலி, கீழ்ப்பாக்கம் ஜே.ஜே. உள்விளையாட்டு அரங்கை ஒரு சில நொடிகள் அதிர வைத்தது.

இப்படி ஐந்து முதல் பத்து முறை அடுத்தடுத்து அம்புகளைத் தொடுத்து முடித்த அடுத்த சில நிமிடங்களில் இலக்குப் பலகைகளில் கொத்துக்கொத்தாய் அம்புகள் பாய்ந்திருந்தன. துல்லியமாக அம்புகளைப் பாய்ச்சியிருந்த அந்த வில் விளையாட்டு வீரர்கள் அத்தனைபெரும் 10 வயதே நிரம்பிய மாணவ, மாணவிகள்.

குறைந்த இடம்… குவியும் கவனம்

அடுத்து 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், பிறகு 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், அதன் பிறகு 20 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவு மாணவர்கள், இறுதியாக 35 வயதுக்கு மேற்பட்ட ‘வெட்டரன்’ பொதுப் பிரிவு எனக் காலை 9 மணிக்குத் தொடங்கிய மாநில அளவிலான வில் விளையாட்டுப் போட்டிகள் 18 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 380 பங்கேற்பாளர்களுக்கு இடையில் நடந்த கடும்போட்டிகளாகச் சூடு பிடித்தன. மாநில அளவிலான இந்தப் போட்டிகளை ‘தமிழ்நாடு ஃபீல்டு ஆர்ச்செரி டெவலப்மெண்ட் அண்ட் வெல்ஃபேர் அசோசியேஷன்’ கடந்த வாரம் நடத்திக்கொண்டிருந்தது.

பொதுவாக வில் விளையாட்டு என்றால் அது திறந்தவெளியில் நடப்பதுதான் என்ற பார்வை இருக்கிறது. ‘இது என்ன உள்ளரங்க (இண்டோர்) வில் விளையாட்டு?’ என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முதன்மைப் பயிற்சியாளருமான ம. மணிவாசகத்திடம் கேட்டதும் விளக்க ஆரம்பித்தார். “வேட்டையாடவும் பிறகு போர்த் தொழில் செய்யவும் வில்லை ஒரு ஆயுதமாகக் கண்டறிந்தவர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடிகள். அங்கிருந்து புலம்பெயர்ந்த மனித இனத்தில் வில்லைத் திறமையாகப் பயன்படுத்தியவர்களில் தமிழர்களும் ரோமானியர்களும் மட்டுமே 5 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரோமானியர்களிடமிருந்து கிரேக்கர்களும் தமிழர்களிடமிருந்து சீனர்களும் வில் வித்தையைக் கற்றுக்கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இப்படிப்பட்டப் பெருமைக்குரிய வில்லை வைத்து வித்தைகள் பல செய்ய ஆரம்பித்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. வில்- அம்பு ஒரு வீரக்கலையாக இருந்தாலும் அதன் மீது உயிர்க் கொலை புரியும் கறை படிந்திருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அது வில் விளையாட்டாக ஏற்றம்பெற்று ஒலிம்பிக்கில் இடம்பிடித்துவிட்டது.

வில் விளையாட்டைப் பொருத்தவரை நாட்டுக்கு நாடு விதிமுறைகளும் வெற்றிப் புள்ளிகள் கணக்கிடப்படும் முறையும் மாறுகின்றன. அதேபோல் பயன்படுத்தும் வில்களிலும் பாரம்பரிய வில், நவீனத் தொழில்நுட்பம் கொண்ட வில் எனப் பல வகைகள் இருக்கின்றன. ‘அவுட்டோர் ஆர்ச்செரி’ என்று அழைக்கப்படும் திறந்தவெளி வில் விளையாட்டு எத்தனைப் பிரபலமோ அதேபோல் ‘ஃபீல்ட் ஆர்ச்செரி’யும் ஒரு பிரிவாக உலகம் முழுவதும் இன்று பிரபலமாகிவிட்டது. இது இந்தியாவிலும் மிகப் பிரபலமாக மாறிவருவதற்கு முக்கியமான காரணம் குறைந்த இடத்தில், குறைவான நேரத்தில் இதற்கான பயிற்சியை எடுத்தால் போதும் என்ற அம்சம்தான்” என்றார்.

இந்த உள்ளரங்க வில் விளையாட்டைக் கற்றுக்கொள்வதன் மூலம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் என்ன நன்மை?

இலக்கை அடையும் மகிழ்ச்சி

“சிறு வயதுமுதலே பிள்ளைகளுக்கு ‘வாழ்க்கைன்னா ஒரு இலக்கு தேவை’ என்று சொல்லித்தருகிறோம். அவர்கள் வளர்ந்து, படித்து இலக்கை அடைந்து வாழ்க்கையில் வெற்றிபெறும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படிப்பட்ட இலக்கை அடையும் சந்தோஷத்தைத் தரும் ஒரே விளையாட்டு இந்த வில் விளையாட்டுதான். இதன் அடிப்படையான நேர்மறை அம்சம் என்னவென்றால், உடல், மனம், செயல்திறன் ஆகியவற்றுக்கு இந்த வில் விளையாட்டு பல நன்மைகளைத் தருகிறது.

முதலில் கண்களில் துல்லியமான பார்வைத் திறனை அதிகரிக்கிறது. இன்று நூறில் 40 மாணவர்களுக்கு சிலிண்டர் பவர், கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்களில் நீர் வழிதல், அடிக்கடி கலங்குதல் என்று பல கண் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இவை அனைத்தையுமே இந்த உள்ளரங்க வில்விளையாட்டு சரிசெய்துவிடும்.

இன்று ஐந்து வயதுமுதல் 15 வயது வரை ‘டிஸ்லெக்‌சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்த விளையாட்டில் ‘கவனம் குவித்தல்’ முறையைத்தான் முதலில் சொல்லித் தருகிறோம். இந்த விளையாட்டைத் தொடர்ந்து பழகும்போது கற்றல் குறைபாட்டிலிருந்து குழந்தைகள் வெகு சிக்கிரமாகவே வெளியே வந்துவிட முடியும். உடல், மனம் ஆகியவை கைகள் மற்றும் கண்கள் வழியே ஒருங்கிணைந்து செயல்படுவதால் கவனச் சிதறல் இல்லாமல் படிப்பில் சாதிக்கத் தேவையான ஊக்கத்தைத் தருகிறது. உடலின் மேற்பகுதிக்கு முழுமையான உடற்பயிற்சியையும் தருகிறது.

உள்ளரங்க விளையாட்டு என்பதால் இதைத் தற்போது சில பார்வையற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்து வருகிறோம். ‘ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா’ இந்த விளையாட்டை அங்கீகரித்து தேசிய அளவில் போட்டிகள் நடத்தி வருகிறது. அதேபோல் மாநில அரசும் இந்த விளையாட்டை அங்கீகரித்தால், அரசுப் பள்ளி மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுத்தர எங்கள் சங்கம் தயாராக இருக்கிறது” என்கிறார்.

ம. மணிவாசகம்

SCROLL FOR NEXT