இன்றைய இளம் இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த யாராவது வாய்ப்புத் தரக் காத்திருக்கத் தேவை இல்லை. பெரிய மேடையோ, பார்வையாளர்களோகூட தேவை இல்லை. ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பதிவு செய்துதான் தங்களுடைய இசைப் பதிவை வெளியிட வேண்டும் என்பதில்லை. தேவை ஒன்றே ஒன்றுதான், திறமை! அது இருந்தால் அத்தனையும் சாத்தியம். இதை நிரூபிக்கிறார் இளம் பாடகி மோனிஷா.
மோனிஷா, தான் பாடி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் பல ஆயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கின்றன. சில வீடியோக்களுக்குக் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளன. தமிழ்த் திரையிசைப் பாடல்கள் முதல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரு கலக்குக் கலக்குகிறார் மோனிஷா. பின்னணியில் கரோக்கியோ அவ்வளவு ஏன் ஒரு கீபோர்டுகூட இல்லாமல் முழுக்க முழுக்கத் தன் குரலால் அனைவரையும் கவர்கிறார். தம்பூரா ஸ்ருதியும் அவருடைய கானமும் இணையும்போது தேனாக ஒலிக்கிறது இசை.
இசைக் கருவிகள் ஏதுமின்றிக் குரல் மூலமாகவே இசைக் கருவிகளின் ஒலியை எழுப்பும் கபெல்லா (Capella) ஸ்டைலில் இவர் தோழியுடன் பாடியிருக்கும் ‘தி எவல்யூஷன் ஆஃப் மியூசிக்’ (The Evolution of Music), ‘காசல் கவர் அட் ஹோம்’ (‘Causal Cover at Home’) உள்ளிட்ட பாடல்களின் கவர் வெர்ஷன் அசத்தல். தம்பூராவின் ஸ்ருதி மட்டும் பின்னணியில் ஒலிக்க இந்துஸ்தானியிலும் அனாயாசமாகப் பாடுகிறார்.
பாடுவதில் மட்டுமல்லாமல் டிவி தொடர்களில், திரைப்படங்களில் டப்பிங் பேசுவதிலும் தன்னுடைய திறமையை நிரூபித்துவருகிறார். ‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் நடிகை அபிநயாவுக்குக் குரல் கொடுத்தது மோனிஷாதான். ஏற்கெனவே டிவி இசைப் போட்டிகளில் பங்கேற்றுப் பிரபலங்களுடன் பாடியிருந்தாலும் ஃபேஸ்புக் இவரை அதுக்கும் மேலே கொண்டுபோகிறது!